தேனி, ஜூன் 11 : தேனி அருகே உப்புக்கோட்டையில் பள்ளித்திறந்த முதல்நாளில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வரவேற்றனர். தேனி அருகே உப்புக்கோட்டை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளி திறந்தது.
இதனையடுத்து, இப்பள்ளியில் 1ம் வகுப்பில் புதிதாக சேர்ந்த 15 மாணவ, மாணவியர்களுக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் இக்கிராமத்தில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுக் மண்டபத்தில் இருந்து மாணவ, மாணவியர்களுக்கு பரிவட்டம் கட்டி, மலர் மாலை அணிவித்து கும்பத்துடன் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் ஆரத்தி எடுத்தும், பூக்களை வழங்கியும் வரவேற்பு அளித்தார். இதில்ஆசிரியை தெய்வசங்கரி, கலையரசி, முருகன், முருகையா மற்றும் பெற்றோர், ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post தேனி அருகே உப்புக்கோட்டையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு appeared first on Dinakaran.