தென்னை மரத்தில் மின்னல் தாக்கி மின்சார பெட்டி வெடித்து சிறுமியின் இரு கண்கள் பாதிப்பு

கண்டாச்சிபுரம், ஆக. 12: கெடார் அருகே வீட்டின் பின்புறம் உள்ள தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதில் மின்சார பெட்டி வெடித்து சிறுமியின் இரு கண்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. விக்கிரவாண்டி, கண்டாச்சிபுரம், கெடார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயங்கர இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

இந்நிலையில் கெடார் அடுத்த கக்கனூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை அதீத சத்ததுடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதில் நள்ளிரவு 12 மணியளவில் கக்கனூர் கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள தென்னை மரத்தில் அதீத சத்ததுடன் மின்னல் தாக்கியுள்ளது. தூங்கி கொண்டிருந்த அவரது மகள் சன்மதி (14), கண் விழித்துள்ளார். அப்போது வீட்டின் மின்சார பெட்டி வெடித்ததை சன்மதி பார்த்துள்ளார்.

அப்போது சிறுமி சன்மதி கண் வலியால் கதறி துடித்து அழுதுள்ளார். இதனால் சிறுமியை அவரது குடும்பத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மின்சார பெட்டி வெடித்து சிதறியதில் அதன் அதீத ஒளியை பார்த்ததால் சிறுமியின் இரு கண்கள் பாதிப்படைந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து கெடார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தென்னை மரத்தில் மின்னல் தாக்கி மின்சார பெட்டி வெடித்து சிறுமியின் இரு கண்கள் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: