×

தென்னையில் வெள்ளை ஈக்கள் தாக்குதலை தடுப்பது எப்படி?

திருப்பூர், ஏப். 7: திருப்பூர் வேளாண்மை இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தென்னையை தாக்கி அதிக சேதம் உண்டாகும், ஒரு சாறு உறிஞ்சும் பூச்சியாகும். தென்னையில் இதன் தாக்குதல் முதன் முதலாக 2004-ம் ஆண்டில் மத்திய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோர நாடான பெலிஸ் நாட்டில், மார்டின் என்ற விஞ்ஞானியால் கண்டறியப்பட்டது. இவற்றின் தாக்குதல் அறிகுறிகளாக இலைகளின் கீழ்பரப்பில் சுருள் சுருளாக பூச்சிகளின் முட்டைகள் காணப்படும். முட்டைகள் அடர்ந்த வெண்ணிற மெழுகு போன்ற துகள்களால் மூடப்பட்டிருக்கும்.

இவற்றின் உடலில் இருந்து சுரக்கும் ஒரு வகையான தேன் போன்ற இனிப்பு திரவத்தினால், கரும்பூஞ்சனம் பெருமளவில் அதன் மேல் வளர்ந்து, பயிர் பரப்பு முழுவதும் கருப்பு நிறமாக மாறிவிடும். இதனால் ஒளிச்சேர்க்கை தடைப்பட்டு பயிர் வளர்ச்சி பெருமளவில் குன்றி விடுகிறது. இவற்றால் பாதிக்கப்பட்ட இலைகளில் இவை சுரக்கும் இனிப்பு திரவத்திற்காக கூடும் எறும்புகளை காணலாம். இந்த பூச்சிகளினால் சாறு உறிஞ்சப்பட்டு, பயிர் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்பட்டாலும், பயிர் முழுவதுமாக இறந்து விடுவதில்லை. இதனை தடுக்க பூச்சிகள் நடமாட்டம் மற்றும் சேதாரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

பூச்சி தாக்குதலின் ஆரம்ப நிலையிலேயே மஞ்சள் ஒட்டுப்பொறிகள் ஏக்கருக்கு 7,10 என்ற அளவில் பயன்படுத்தி பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்தும், இவற்றை அதிக அளவில் பயன்படுத்தி பூச்சிகளின் எண்ணிக்கையையும் வெகுவாக குறைக்கலாம். இந்த பூச்சிகளின் நடமாட்டம் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அதிகமாக இருப்பதால், விளக்கு பொறிகள் மூலம் கவர்ந்திருக்கலாம். இலைகளின் கீழ்ப்பகுதியில் காணப்படும் முட்டைகள், இளம் பருவம் மற்றும் முதிர்ந்த பூச்சிகளை விசைத்தெளிப்பான் கொண்டு தண்ணீரை மிகுந்த அழுத்தத்துடன் பீய்ச்சி அடிப்பதன் மூலம் பூச்சிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

தேவைப்பட்டால் எண்ணெய் சோப்பு, கரைசல், மூலிகை பூச்சி விரட்டி போன்றவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பூச்சிகளை கட்டுக்குள் வைக்கலாம். நன்மை பூச்சிகளை வயல் சூழலில் அதிகப்படுத்த உயிரியல் ஆய்வகங்களில் இருந்து பச்சை கண்ணாடி இறக்கை பூச்சிகளின் முட்டைகளை, இளம் பருவ பூச்சிகளை பெற்று வயலில் விட வேண்டும். தென்னையில் இயற்கையாகவே அதிக அளவில் இந்த பூச்சிகளை அழிக்கும் ஒட்டுண்ணி குளவிகள் காணப்படுகின்றன. அவை நாளடைவில் பெருகி இந்த பூச்சிகளின் தாக்கத்தை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரும் தன்மை கொண்டவை. எனவே பூச்சிக்கொல்லிகள் தெளித்து இடையூறு செய்யாமல் பாதுகாப்பது, விவசாயிகள் அனைவருடைய முக்கிய கடமையாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தென்னையில் வெள்ளை ஈக்கள் தாக்குதலை தடுப்பது எப்படி? appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Joint Director of ,Agriculture ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாவட்டத்தில் குடும்ப...