தென்திருப்பேரை கோயிலில் பங்குனி பிரமோற்சவ திருவிழா

வைகுண்டம், ஏப். 6: தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதர் கோயிலில் பங்குனி பிரமோற்சவ திருவிழா, நேற்று (5ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது. நவதிருப்பதி கோயில்களில் 7வதாகவும், சுக்கிரன் ஸ்தலமாகவும் விளங்கக் கூடிய தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதர் கோயிலில் பங்குனி பிரமோற்சவ திருவிழா, ஆண்டுதோறும் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு திருமஞ்சனம், 5.30 மணிக்கு நித்தியல் கோஷ்டி நடந்தது. காலை 6 மணிக்கு உற்சவர் நிகரில் முகில்வண்ணன் தாயார்களுடன் முன்மண்டபத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து 6.15 மணிக்கு கொடிபட்டம் சுற்றி எடுத்து வரப்பட்டு 7 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, தக்கார் அஜித், வைகுண்டம் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவிழா நாட்களில் தினமும் காலையில் தோளுங்கினியான் வீதி புறப்பாடு, மாலையில் பரங்கிநாற்காலி, சிம்மம், அனுமார், சேஷ வாகனம், கருடன், அன்னம், யானை, இந்திர விமானம், குதிரை ஆகிய வாகனங்களில் சுவாமி மகரநெடுங்குலைக்காதர் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. 9ம் தேதி கருட சேவையும், 13ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. 10ம் திருவிழா அன்று காலையில் தாமிரபரணி தீர்த்தவாரி, மாலையில் வெற்றிவேர் சப்பரத்தில் வீதியுலா நடக்கிறது.

The post தென்திருப்பேரை கோயிலில் பங்குனி பிரமோற்சவ திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: