தூத்துக்குடியில் 5 நாளாக நீடித்த விசைப்படகு தொழிலாளர் போராட்டம் வாபஸ்

தூத்துக்குடி, அக்.15: தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து 5 நாட்களாக நடைபெற்று வந்த விசைப்படகு தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 260 விசைப்படகுகள் உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில், விசைப்படகு உரிமையாளர்கள் வாரத்தில் ஒருநாள் விடுமுறை எனவும், மீதமுள்ள 6 நாட்களில் சுழற்சி முறையில் விசைப்படகுகளை இயக்குவது என முடிவு செய்தனர். இதன்படி ஒரு படகு வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே மீன் பிடிக்க செல்லும் நிலை உள்ளது. அனைத்து நாட்களும், அனைத்து படகுகளும் செல்லும்போது, போதுமான மீன்கள் கிடைக்காமல் திரும்பி வருகின்றனர். இதனால் வீண் செலவுகள் ஏற்படுவதாக கூறி உரிமையாளர்கள் இம்முடிவை எடுத்தனர்.

ஆனால் விசைப்படகு தொழிலாளர்கள் வாரத்தில் 6 நாட்கள் மீன்பிடிக்கச் சென்றால்தான் எங்களது குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்காது. எனவே 6 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும் என வலியுறுத்தி கடந்த 10ம் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று 5வது நாளாக இந்த போராட்டம் தொடர்ந்த நிலையில், விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த மீன்பிடி தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து நாளை (16ம் தேதி) முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.

The post தூத்துக்குடியில் 5 நாளாக நீடித்த விசைப்படகு தொழிலாளர் போராட்டம் வாபஸ் appeared first on Dinakaran.

Related Stories: