தர்மபுரி, ஜூன் 18: தர்மபுரி மாவட்டத்தில் நடந்த தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வில் 46 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தமிழக அளவில் தேர்ச்சி சதவீதத்தில் 5வது இடம் பிடித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை கைவிட்டு, உயர்கல்வி கற்க உதவியாக இருக்கவும், மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக்கூடாது என்ற நோக்கில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில், சென்னை அரசுத்தேர்வுகள் இயக்ககம் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வை, கடந்த ஜனவரி 25ம் தேதி நடத்தியது. 1 லட்சத்து 43 ஆயிரத்து 351 மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர்.
இத்தேர்வில் 1000 மாணவ, மாணவிகள் (500 மாணவர்கள், 500 மாணவிகள்) தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை, மாதம் ரூ.1000 வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் உதவித்தொகையாக ரூ.10ஆயிரம் வழங்கப்படும். இத்தேர்வின் முடிவுகள் கடந்த 12ம் தேதி வெளியிடப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் 15 தேர்வு மையங்களில், 4536 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில், 29 மாணவர்கள், 17 மாணவிகள் என மொத்தம் 46 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வு தேர்ச்சி சதவீதத்தில், தமிழகத்தில் 5 இடத்தில் தர்மபுரி மாவட்டம் இடம் பிடித்துள்ளது. பயிற்சி அளித்த ஆசிரியர்கள் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களை, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஜோதி சந்திரா பாராட்டினார்.
The post திறனாய்வு தேர்வில் 46 மாணவர்கள் தேர்ச்சி appeared first on Dinakaran.
