திருமங்கலம், ஆக. 2: திருமங்கலத்தில், மகளிர் குழு பெயரில் ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் மோசடி செய்த வங்கி ஊழியர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் எதிரே தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் மகளிர்குழு திட்ட மேலாளராக மதுரை ஆரப்பாளையத்தினை சேர்ந்த சதீஷ்கண்ணன்(28) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த வங்கியில் மகளிர்குழு லோன் பிரிவு ஊழியராக சிலைமானை சேர்ந்த நந்தகுமார்(27) உள்ளார்.
இவர் சில மாதங்களுக்கு முன்பு 10 பேர் கொண்ட மகளிர் குழு பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் பணத்தினை பெற்றுள்ளார். மகளிர்குழு என்பதால், வங்கியும் பணத்தினை வழங்கியுள்ளது. முதல் அந்த மகளிர் குழு உறுப்பினர்கள் மாதமே தவணையை செலுத்தாமல் இருக்கவே, மேலாளர் சதீஷ்கண்ணன் குழுவினரை அழைத்து பணத்தினை கட்டும்படி கூறயுள்ளார்.
நாங்கள் எந்த பணமும் வங்கியில் வாங்கவில்லை என குழுவை சேர்ந்த பெண்கள் கூறவே, அதிர்ச்சியடைந்த மேலாளர், லோன் பிரிவு ஊழியர் நந்தகுமாரிடம் விசாரித்துள்ளார். அப்போது அவரது பணமோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து மேலாளர் சதீஷ்கண்ணன் கொடுத்த புகாரின் பேரில், நந்தகுமார் மீது திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருமங்கலம் மகளிர் குழு பெயரில் ரூ.4.40 லட்சம் மோசடி செய்த வங்கி ஊழியர் மீது வழக்கு appeared first on Dinakaran.