திருமங்கலம் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

திருமங்கலம், ஜூன் 7: திருமங்கலம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சேடபட்டி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருமங்கலம் அருகேயுள்ளது அச்சம்பட்டி கிராமம். இங்குள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் சுமார் 70 வீடுகள் உள்ளன. இவர்களுக்கு போர்வெல் மூலமாக மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த ஒரு வார காலமாக மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் குடிநீர் சப்ளை செய்ய இயலவில்லை என தெரிகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கிவந்தனர். குளிக்க, துணிகள் துவைக்க இரண்டு கி.மீ தூரமுள்ள அச்சம்பட்டி கிராமத்திற்கு சென்று பொதுகுழாயில் தண்ணீர் பிடித்த வந்துள்ளனர்.

இதுகுறித்து திரளி ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் மின்மோட்டார் சரி செய்யப்படவில்லை என தெரிகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள் நேற்று காலை திருமங்கலம் – சேடபட்டி மெயின் ரோட்டில் திடீர் சாலைமறியிலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், பணிக்கு திருமங்கலம், மதுரை செல்வோர் அவதிப்பட்டனர். தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியிலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து, சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

The post திருமங்கலம் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: