திண்டிவனம் நீதிமன்றத்தில் சி.வி சண்முகம் எம்பி சாட்சியம்

திண்டிவனம், ஆக. 22: ஆதரவாளர் கொலை வழக்கில் திண்டிவனம் நீதிமன்றத்தில் சி.வி. சண்முகம், அவரது சகோதரர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான சி.வி. சண்முகம் எம்பி, கடந்த 2006ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, தி.மு.க கூட்டணியில் திண்டிவனம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. அந்த தேர்தல் பிரசாரம் ஓய்ந்தவுடன், கடைசி நாளான அன்றிரவே சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் வீட்டிலிருந்தபோது, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவர் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் இருந்து சி.வி.சண்முகம் உயிர் தப்பினாலும், அவரின் ஆதரவாளரான முருகானந்தம் கொலை செய்யப்பட்டார். கொலை முயற்சி தாக்குதலுக்கு பாமகவினர்தான் காரணம் என்று 26பேர் மீது புகார் அளிக்கப்பட்டதன்பேரில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சி.வி. சண்முகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து கடந்த 2011ம் ஆண்டு முருகானந்தம் கொலை வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவ்வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டிவனம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் அவ்வழக்கு விசாரணை நேற்று வந்தது. இதில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சி அளித்தனர். இவ்வழக்கின் சாட்சிகள் மீதான விசாரணை மதியம் தொடங்கிய நிலையில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக் முன்பு சி.வி.சண்முகம் முதலாவதாக சாட்சியளித்தார். தொடர்ந்து இவ்வழக்கில் மற்றொரு முக்கிய சாட்சியான சி.வி.சண்முகமும், அவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் சாட்சியளித்தார். இதில் சி.வி.சண்முகம் தரப்பு வழக்கறிஞர்களான உயர்நிதிமன்ற வழக்கறிஞர்களான ராஜா அய்யப்பன், பாலமுருகன், ஜோதிக்குமார் மற்றும் மனோஜ்குமார் ஆகியோர் ஆஜராகினர். சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞராக விஜய்யும், மற்றும் எதிர் தரப்பில் செந்தில், முன்னாள் அரசு வழக்கறிஞர் முத்துராமன், நாராயணன், செந்தில், ரஞ்சித் ஆகிய வழக்கறிஞர்கள் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தினர்.

The post திண்டிவனம் நீதிமன்றத்தில் சி.வி சண்முகம் எம்பி சாட்சியம் appeared first on Dinakaran.

Related Stories: