தளி அருகே அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்ட முயற்சி: வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தினர்

தேன்கனிக்கோட்டை: தளி அருகேயுள்ள பெட்டப்பள்ளி கிராமத்தில், புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்ட முயன்றவர்களை வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தினர்.தேன்கனிகோட்டை தாலுகா, தளி அருகே மாரப்பள்ளி அடுத்த பெட்டப்பள்ளி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள பலருக்கு வீடுகள் இல்லாததால் வாடகை வீடுகளிலும், பாழடைந்த வீடுகளிலும் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் அருகில் அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் உள்ளது. இந்நிலையில், நேற்று காலை பெட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 45க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டுவதற்கான அஸ்திவார பணிகளை தொடங்கினர். இதுகுறித்து தகவலறிந்த தேன்கனிகோட்டை தாசில்தார் இளங்கோ, கக்கதாசம் வருவாய் அலுவலர் பாலகிருஷ்ணன், பெட்டப்பள்ளி விஏஓ மாதேஷ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தி அரசு நிலங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வருவதை தடுத்து நிறுத்தினர். அரசு நிலங்களை ஆக்கிரமித்து வீடுகளை கட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதால், பொதுமக்கள் கட்டிட வேலைகளை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது….

The post தளி அருகே அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்ட முயற்சி: வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தினர் appeared first on Dinakaran.

Related Stories: