தனியார் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்திய அதிகாரிகள் மீது சிபிசிஐடி விசாரணை: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மருத்துவ மேற்படிப்பில் கடந்த 2020-21ம் கல்வியாண்டுக்கு  தனியார் மருத்துவ கல்லூரிகளில் 113 காலியிடங்களில் கலந்தாய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாக கூறி மருத்துவர்கள் சந்தோஷ்குமார், கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், தகுதி பெறாதவர்களை மருத்துவ மேற்படிப்பில் சேர்த்த விவகாரத்தில் மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் இடையிலான சதியின் பின்னணியில் உள்ள நபர்கள் யார். கல்லூரிகள் வசூலித்த பணம் எவ்வளவு என்பது குறித்து விசாரிக்குமாறு சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்த, மருத்துவ மேற்படிப்பு தேர்வுக்குழுவின் அப்போதைய செயலாளர் செல்வராஜன் தான் காரணம். அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பல முட்டுக்கட்டைகள் எழுந்ததால் வழக்கு கூட பதிவு செய்ய முடியவில்லை என்று கூறப்பட்டிருந்தது.  இந்த அறிக்கையை மேற்கோள்காட்டிய நீதிபதி, ஓய்வுபெற்ற மருத்துவ மேற்படிப்பு தேர்வுக்குழு முன்னாள் செயலாளர் செல்வராஜனுக்கான ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கையை தமிழக தலைமைச் செயலாளர் எடுக்க வேண்டும்.அதேபோல அடையாளம் தெரியாத நபர்களுக்கும், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கு எதிராகவும், சம்பந்தப்பட்ட துறையினருக்கு எதிராகவும் சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணையில் தொடர்புடைய அதிகாரிகளை தமிழக டிஜிபி இடமாற்றம் செய்யக் கூடாது. தகுதி இருந்தும், மேற்படிப்பு கனவை தொடர முடியாமல் பாதிக்கப்பட்ட இரு மனுதாரர்களுக்கு தலா 4 லட்சம் ரூபாயை இழப்பீடாக நான்கு வாரங்களில் தமிழக அரசு வழங்க வேண்டும். இந்த தொகையை மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு முன்னாள் செயலாளரின் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்ய வேண்டும். இந்த முறைகேடு தொடர்பாக  வழக்குப்பதிவு செய்து, அடுத்தகட்ட விசாரணை அறிக்கையை ஏப்.25ல் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்….

The post தனியார் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்திய அதிகாரிகள் மீது சிபிசிஐடி விசாரணை: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: