வண்டலூர், கிண்டி பூங்காக்களில் பராமரிப்பு, மேம்பாட்டு பணிக்கு 20.31 கோடி: ஆணைய ஆட்சி மன்ற கூட்டத்தில் அனுமதி

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 20வது ஆட்சி மன்ற குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, வேலூர் அமிர்தி பூங்கா, சேலம் குரும்பப்பட்டி பூங்கா ஆகிய பூங்காக்களில் 2018-19ம் ஆண்டிற்கு பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக மொத்தம் 20 கோடியே 31 லட்சம் ரூபாய் நிதி அனுமதிக்கப்பட்டது. மேலும் முதல்வர் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இந்த ஆண்டு 10,000 மரக்கன்றுகள் நட உத்தரவிட்டார்.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 50 லட்சம் செலவில் இரண்டு குளிரூட்டப்பட்ட உலாவிட வாகனங்கள், வெளிநாடுகளிலிருந்து விலங்குகள் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு இறக்குமதி செய்ய 2 கோடி நிதி, கிண்டி சிறுவர் பூங்காவில் வன உயிரினங்களின் நலனுக்காக 45 லட்சம் செலவில் ஆரம்ப நிலை விலங்கு மருத்துவமனை, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சேலம் குரும்பப்பட்டி பூங்காவிற்கு 7 லட்சம் செலவில் ஒரு மின்கல ஊர்தி ஆகிய பணிகளுக்காக நிதி அனுமதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: