நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்மழை : பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு

கூடலூர்: நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்மழை பெய்து வருவதால், பெரியாறு அணை நீர்மட்டம் ஓரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 4,654 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 5,653 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, 152 அடி உயரமுள்ள பெரியாறு அணை நீர்மட்டம் 129.50 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 5,653 கனஅடியாகவும், அணையிலிருந்து வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 4,525 மில்லியன் கனஅடி.

வைகை அணையின் நீர்மட்டம் 48.33 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 1,169 கன அடியாகவும், அணையிலிருந்து வினாடிக்கு 960 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 1,782 மில்லியன் கனஅடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121.68 அடி. நீர்வரத்து இல்லை. அணையிலிருந்து வினாடிக்கு 3 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 92.42 மில்லியன் கனஅடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்தும், நீர் வெளியேற்றம் இல்லை. அணையின் இருப்பு நீர் 212.08 மில்லியன் கனஅடியாக உள்ளது. மழையளவு: பெரியாறு  84 மி.மீ, தேக்கடி  65 மி.மீ., கூடலூர்  10.2 மி.மீ., உத்தமபாளையம்  6 மி.மீ., வீரபாண்டி  25 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

சுருளி, கும்பக்கரையில் வெள்ளப்பெருக்கு

மேற்குதொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஹைவேவிஸ் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியிலும் நேற்று காலை நீர்வரத்து அதிகரித்துள்ளது. இங்கும் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: