×
Saravana Stores

சேலம் ஜவ்வரிசிக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும்

சேலம், ஆக.27: சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீட்டால், சர்வதேச அளவில் உரிய அங்கீகாரம் மற்றும் தனித்துவம் கிடைக்கும் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார். சேலம் ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சேவை தொழிற்கூட்டுறவு சங்கம் சார்பில், சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருட்களின் நோடல் அலுவலர் சஞ்சய்காந்தி புவிசார் குறியீடு சான்றிதழை வழங்கினார். விழாவில் சேகோசர்வ் செயலாட்சியர் லலித்ஆதித்ய நீலம் உள்பட சேகோ சர்வ் அதிகாரிகள், ஜவ்வரிசி, ஸ்டார்ச் வியாபாரிகள், மரவள்ளிக்கிழங்கு வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில், கலெக்டர் கார்மேகம் பேசியதாவது: சேகோசர்வ் இந்தியாவிலேயே முதன்முதலாக, மரவள்ளிக்கிழங்கிலிருந்து ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் பொருட்களின் விற்பனைக்காக 1981ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொழிற்கூட்டுறவு சங்கமாகும்.சேலம் சேகோசர்வில் 2.17 லட்சம் மூட்டைகள் அடுக்கும் வசதியுள்ளது.

மின்னணு ஏலவசதி, உறுப்பினர்களுக்கு கடன்வசதி, சந்தை வாய்ப்பு வசதி, ஆய்வக வசதி ஆகியவை ஏற்படுத்தி தரப்படுகிறது. 2022-23ம் ஆண்டு மட்டும் ₹4 கோடியே 20 லட்சத்து 12 ஆயிரம் நிகர லாபம் ஈட்டியுள்ளது. ஜவ்வரிசி பாரம்பரியமிக்க ஒரு உணவு பொருளாகும். ஒரு மாநிலத்தில் உள்ள பாரம்பரியமிக்க பொருளுக்கு, புவிசார் குறியீடு பெறுவது மிகவும் பெருமைப்படக்கூடிய அம்சமாகும். உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச அளவில் சேலம் சேகோ நிலம் என அறியப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 90 சதவீதம் ஜவ்வரிசி, மரவள்ளிக்கிழங்கிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது தமிழகத்தில் சுமார் 60 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் மரவள்ளிகிழங்கிலிருந்து உற்பத்தியாகும் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு பெற்றது மிகவும் பெருமைப்படக்கூடியது. இதனால் உலகளவில் சேலம் ஜவ்வரிசிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மரவள்ளி பயிரிடும் அனைத்து விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும்.

ஜவ்வரிசி மற்றும் மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து உற்பத்தியாகும் பல்வேறு வகை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் மதிப்பும் அதிகரிக்கும். ஆகையால் மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் பயனடைவார்கள். நமது மாவட்ட பொருளாதாரம் மேன்மேலும் உயரும். சங்க உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் தரமான பொருட்களை சேகோசர்வ் சங்கத்திற்கு மட்டுமே அனுப்ப வேண்டும். வியாபாரிகளும் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் மூட்டைகளை சேகோசர்வ் சங்கத்தின் மூலமே கொள்முதல் செய்து பயன் பெறலாம். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

The post சேலம் ஜவ்வரிசிக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும் appeared first on Dinakaran.

Tags : Salem Javarisi ,Salem ,Salem Javvarisi ,Dinakaran ,
× RELATED ₹3 லட்சம் கடனுக்கு ₹40 லட்சம் கேட்டு...