சென்னையில் தீவிர தூய்மை பணி திட்டத்தில் ஒரே நாளில் 609.34 மெட்ரிக் டன் திடக்கழிவு, கட்டிட கழிவு அகற்றம்; மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  நேற்று முன்தினம்  நடைபெற்ற தீவிர தூய்மை பணியின் மூலம் 156.95 மெட்ரிக் டன்  திடக்கழிவுகளும்,  452.39  மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகளும் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் 2ம் மற்றும் 4ம் சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” தொடங்கப்படும் என  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 2022-23 ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் அறிவித்தார். நகர்ப்புற பகுதிகளில் தீவிர தூய்மை பணி திட்டத்தினை தொடங்கி வைக்கும் விதமாக, 03.06.2022 அன்று  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம் மண்டலத்தில்  தீவிர தூய்மை பணியினை முதல்வர்  தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து,  சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும்  மாதத்தின் 2ம் மற்றும் 4ம் சனிக்கிழமைகளில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய பகுதிகளான பூங்காக்கள், பள்ளி வளாகங்கள், பேருந்து நிறுத்தங்கள், மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் உள்ள அமைவிடங்களில் தீவிர தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் தன்னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், மக்கள் பிரிதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2022 ஜூலை மாதத்தின் 2ம் சனிக்கிழமையான நேற்று முன்தினம்   சென்னை மாநகராட்சி சார்பில் 200 வார்டுகளிலும் தீவிர தூய்மை பணி பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி மேயர் பிரியா  மணலி மண்டலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு “நமது குப்பை நமது பொறுப்பு”  என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி, பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் பொதுமக்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் பங்களிப்புடன் நடைபெற்ற தீவிர தூய்மை பணிகளில் 283 பேருந்து நிறுத்தங்களில் 3.37 மெட்ரிக் டன் உலர் கழிவுகள்,  128 பூங்காக்களில் 14.86 மெட்ரிக் டன் உலர் கழிவுகள், 75 வழிபாட்டு தலங்களில் 4.63 மெட்ரிக் டன் உலர் கழிவுகள்,  37 ரயில்வே நிலையங்களின் புறப்பகுதிகளில் 6.48 மெட்ரிக் டன் உலர்  கழிவுகள்,  54 தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகளில் 7.88 மெட்ரிக் டன் உலர் கழிவுகள்,  மாநகராட்சி மயான பூமிகள் அமைந்துள்ள 53 இடங்களில் 19.67 மெட்ரிக் டன் உலர் கழிவுகள் மற்றும் இதர 28 இடங்களில் சுமார் 48.04 மெட்ரிக் டன் உலர் கழிவுகள் என மொத்தம் 104.93 மெட்ரிக் டன் உலர் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இதேபோல், கட்டிடக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ள 63 இடங்கள் கண்டறியப்பட்டு அவ்விடங்களில் இருந்து  452.39 மெட்ரிக் டன் கட்டிடக்கழிவுகள் அகற்றப்பட்டன. மருத்துவமனை மற்றும் இதர மக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில் 78 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர தூய்மை பணியில்  52.02  மெட்ரிக் டன் அளவிலான திடக்கழிவுகள் அகற்றப்பட்டன. எனவே,  சென்னை மக்கள் பொது இடங்களில் தேவையற்ற கழிவுகளை கொட்டுவதை தவிர்த்து, தங்கள்  இல்லங்களில் சேகரமாகும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்கும்படி சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது….

The post சென்னையில் தீவிர தூய்மை பணி திட்டத்தில் ஒரே நாளில் 609.34 மெட்ரிக் டன் திடக்கழிவு, கட்டிட கழிவு அகற்றம்; மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: