சென்னையில் சாலைகள், தெருக்கள், வாகன நிறுத்துமிடங்கள் ஆகிய இடங்களில் நீண்ட நாட்கள் நிறுத்தியிருக்கும் வாகனங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

சென்னை: சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சாலைகள், வாகன நிறுத்துமிடங்கள், இதர இடங்கள் மற்றும் காவல் நிலையங்களில் உரிமை கோராமல் கேட்பாரற்று கிடந்த 978 வாகனங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, 40 வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டும்,  364 வாகனங்கள் மீது கு.வி.மு.ச. பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டும், 106 காவல் நிலையங்கள் சுத்தம் செய்து, தூய்மைபடுத்தப்பட்டது.    சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் குற்றங்களை தடுக்கவும், குற்ற வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்கவும் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, அவ்வப்போது காவல்துறை – பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, காவல்துறை சார்பில் பல்வேறு அறிவுரைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.    இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகரில் சாலைகள், தெருக்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் இதர இடங்களில் நீண்ட நாட்கள் நிறுத்தியிருக்கும் வாகனங்களை கணக்கெடுத்து, விசாரணை  மேற்கொண்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கவும், காவல் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் உரிமை கோராத மற்றும் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை உத்தரவிட்டதன்பேரில், நேற்று (14.12.2022) காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம், கேட்பாரற்று மற்றும் உரிமை கோராத வாகனங்கள் மீது ஒரு நாள் சிறப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (14.12.2022) சென்னை பெருநகரில் சாலையோரங்களில் நிறுத்தியிருந்த 40 வாகனங்கள் மற்றும் இதர இடங்களில் நிறுத்தியிருந்த 17 வாகனங்கள் என நீண்ட நாட்கள் உரிமை கோராத மற்றும் கேட்பாரற்று கிடந்த 52 இருசக்கர வாகனங்கள், 3 ஆட்டோக்கள் மற்றும் 2 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 57 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு அதன் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அதன்பேரில், வாகனங்களின் பதிவு எண்களை கொண்டு 25 இருசக்கர வாகனங்கள், 1 ஆட்டோ மற்றும் 2 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 28 வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 2 இருசக்கர வாகனங்கள் மீது கு.வி.மு.ச. பிரிவு 102ன் கீழ் கைப்பற்றப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இதர வாகனங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதே போல, நீண்ட நாட்கள் உரிமை கோராமல் ஏற்கனவே காவல் நிலையத்தில் நிறுத்தியிருந்த 614 வாகனங்கள் மற்றும் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 307 வாகனங்கள் என மொத்தம் 921 வாகனங்களின் (821 இருசக்கர வாகனங்கள், 71 ஆட்டோக்கள் மற்றும் 29 இலகுரக வாகனங்கள்) மீது மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் 10 இருசக்கர வாகனங்கள் மற்றும் 2 ஆட்டோக்கள் என மொத்தம் 12 வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 342 இருசக்கர வாகனங்கள் மற்றும் 20 ஆட்டோக்கள் என மொத்தம் 362 வாகனங்கள் மீது கு.வி.மு.ச. பிரிவு 102ன் கீழ் கைப்பற்றப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இதர வாகனங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆக மொத்தம் நேற்று (14.12.2022) நடந்த ஒரு நாள் சிறப்பு சோதனையில், நீண்ட நாட்கள் நிறுத்தியிருந்த உரிமை கோராத மற்றும் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 978 வாகனங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு 40 வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டும், 364 வாகனங்கள் கு.வி.மு.ச. பிரிவு 102ன் கீழ் கைப்பற்றப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதனைத் தொடர்ந்து, காவல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடையாளங்கள் காணப்பட்டு அகற்றப்பட்டதன் மூலம், 106 காவல் நிலையங்கள் மற்றும் காவல் அலுவலகங்கள், காவல் ஆளிநர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, தூய்மைபடுத்தப்பட்டது….

The post சென்னையில் சாலைகள், தெருக்கள், வாகன நிறுத்துமிடங்கள் ஆகிய இடங்களில் நீண்ட நாட்கள் நிறுத்தியிருக்கும் வாகனங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: