சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு லாரி, சரக்கு வாகன உரிமையாளர்கள் வேதனை

சென்னை:  இந்தியாவில் 137 நாட்களுக்குப் பிறகு கடந்த 22ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ₹106.69 மற்றும் டீசல் ₹96.76க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 9 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹ 5. 29 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ₹ 5.36 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணமும் உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. 60 கி.மீ தொலைவுகளுக்குள் கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்று மக்களவையில் ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்தது நடைமுறைக்கு வரும் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் சுங்கச்சாவடி கட்டண உயர்வால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  சென்னையில் அம்பத்தூர், சூரப்பட்டு, வானகரம் சுங்கச்சாவடிகள் அடுத்தடுத்து கட்டணம் செலுத்தும் நிலையில் எரிபொருள் விலை உயர்வும், சுங்கச்சாவடி கட்டண உயர்வும் வாகன ஓட்டிகளுக்கு மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.  இந்த பகுதிகளில் இருந்து தாம்பரத்திற்கு வேலைக்கு செல்ல 3 சுங்கச்சாவடிகளை கடக்க வேண்டியுள்ளது. 3 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூல் செய்கின்றனர். இன்றைய சூழலில் வருமானம் குறைந்து கொண்டே செல்கிறது. மற்றொருபுரம் எரிபொருட்கள், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த சூழல் இப்படியே நீடித்தால் இலங்கை போன்ற நிலை இந்தியாவிற்கு வர வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டி ஒருவர் தெரிவித்துள்ளார்.மற்றொரு வாகன ஓட்டியான உன்னிகிருஷ்ணன் கூறும்போது, மூலக்கடையில் இருந்து பெரும்புதூருக்கு தினமும் செல்கிறேன். மோசமான சாலைகளுக்கு 2 இடங்களில் சுங்க கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என்றார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் பூதக்குடி, மதுரை செல்லும் சாலையில் மதுரை மாவட்டம் சிட்டாம்பட்டி சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதற்கு கூலி வேலையே மேல் என சரக்கு வாகன ஓட்டிகள் ஆதங்கப்படுகின்றனர். மதுரை, ராமநாதபுரம் வரையிலான நான்கு வழிச்சாலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் உள்ள சுங்கச்சாவடியில் தினசரி செல்லும் வாகனங்களுக்கு ₹10 முதல் ₹40 வரையும், மாதாந்திர கட்டணம் ரூ.40ல் இருந்து ₹270 வரையிலும் உயர்ந்துள்ளது. மானாமதுரைக்கு 1300 ரூபாய் வாடகையாக வசூலிக்கிறோம். 600 ரூபாய்க்கு டீசல் போட்டு 220 ரூபாய் சுங்க கட்டணமாக செலுத்தினால் இதில் எங்களுக்கு என்ன லாபம் கிடைக்கும். சரக்கு வாகனங்கள் அதிகம் இருப்பதால் மார்க்கெட்டில் லோடு பிடிப்பது மிகுந்த சிரமமாக உள்ள நிலையில் தற்போது கட்டண உயர்வு என்பது ஜீரணிக்க முடியாததாக உள்ளதாக மதுரையைச் சேர்ந்த ஆறுமுகம் கூறுகிறார்.  தமிழகத்தில் உள்ள 43 சுங்கச் சாவடிகளில் 23 சுங்கச் சாவடிகளில் ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது வாடகை கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என லாரி உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நாமக்கல்லை சேர்ந்த லாரி உரிமையாளர் நல்லதம்பி கூறும்போது, தமிழகத்தில் ஏற்கனவே கட்டணம் உயர்த்தப்பட்ட சுங்கச் சாவடிகளை தவிர்த்து மீதமுள்ள 20 சுங்கச் சாவடிகளில் 5% முதல் 10% உயர்த்தப்பட உள்ளது. இதனால் ஏற்கனவே பாதிப்பிற்குள்ளான லாரி உரிமையாளர்கள், வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். அவ்வாறு வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டால் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும். இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவர் என்றார். இந்நிலையில் பஞ்சாப் மற்றும் அரியானாவில் 10% முதல் 18% வரை சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக பஞ்சாப் மாநில விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியதற்காக இரு மாநில விவசாயிகளை பழிவாங்கும் வகையில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்….

The post சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு லாரி, சரக்கு வாகன உரிமையாளர்கள் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: