சிவகாசி, பிப். 2: சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரையில் ரூ.1கோடி மதிப்பில் நடைபாதை அமைக்கும் பணிகள் தொடங்கியது. சிவகாசி நகரின் மையபகுதியில் சிறுகுளம் கண்மாய் அமைந்துள்ளது. இங்கு சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கரை பகுதியில் நடைமேடை அமைக்க சிவகாசி நகராட்சி நுாற்றாண்டு சிறப்பு நிதியில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கரை பகுதியில் 840 மீட்ட நீளம் 2 அடி அகலம் உள்ள நடைமேடை அமைக்கவும், கண்மாய் உள்ளே கரையை ஒட்டி 5 அடி உயரம் சுவர் எழுப்பி நடைமேடை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் நடைமேடையை சுகாதாரமாக பராமரிக்கும் வகையில் கண்மாய் உள்ளே தடுப்பு வேலிகள், வெளி ஆட்கள் நுழைய முடியாத வகையில் தடுப்பு கம்பிகள் சுற்றிலும் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த பணிகளுக்காக கடந்த 2022ல் பூமிபூஜை போடப்பட்டது.
நிர்வாக நடைமுறை காரணமாக இந்தப் பணிகள் துவங்குவது தாமதமாகி வந்தது. இந்த நிலையில் மாநகராட்சியின் நடவடிக்கையால் நடைபாதை அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கியது. அங்கு நடைபெற்று வரும் பணிகளை மேயர் சங்கீதாஇன்பம், மாநகராட்சி உதவிப் பொறியாளர் ரமேஷ் நேரில் ஆய்வு செய்தனர். கரையில் உள்ள தனியார் கேபிள் ஒயர்கள், மின்கம்பங்களை அகற்றவும், பணிகளை விரைந்து முடிக்கவும் மேயர் உத்தரவிட்டார்.
The post சிவகாசி கண்மாய் கரையில் நடைபாதை அமைக்கும் பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.