சித்தூர் அருகே பகலில் பரபரப்பு தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் புகுந்த யானைகள் கூட்டம்

* பீதியடைந்த பொதுமக்கள் ஓட்டம்* வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கைசித்தூர் :   சித்தூர் அருகே  தண்ணீர் தேடி யானைகள் கூட்டம் பகலில் ஊருக்குள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால்  பொதுமக்கள் பீதியடைந்து ஓட்டம் பிடித்தனர். எனவே, நிரந்தரமாக யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சித்தூர் மாவட்டம், பங்காரு பாளையம் மண்டலம் மொகிலி வெங்கடகிரி கிராமத்தில் நேற்று காலை 10 மணி அளவில் 5க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தண்ணீர் தேடி ஊருக்குள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர், கிராம மக்கள் திரண்டு  யானைகள் கூட்டத்தை பட்டாசு வெடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.  இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமம் பெங்களூரு சித்தூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ளது. கிராமத்துக்கு அருகே வனப்பகுதி உள்ளதால் அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் மற்றும் விவசாய நிலங்களுக்கு புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதுகுறித்து பலமுறை பலமனேர் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம். ஆனால் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.  வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு அருகே கால்வாய்கள் ஏற்படுத்தினால் யானைகள் ஊருக்குள்ளும் மற்றும் விவசாய நிலங்களுக்கும் வராமல் இருக்கும். தற்போது விவசாய நிலத்தில் இருந்த நெல், வாழை, கரும்பு, தக்காளி உள்ளிட்ட பயிர்களை யானைகள் நாசம் செய்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் எங்கள் கிராமத்தில் ஏற்படவில்லை.  மேலும், காட்டுயானைகள் தண்ணீரைத் தேடி கிராமங்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் படை எடுக்கிறது. எனவே வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் ஆங்காங்கே நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்க வேண்டும். வாரத்திற்கு இருமுறை தொட்டிகளில் நீர் நிரப்ப வேண்டும். எங்கள் கிராமம் ஒட்டியுள்ள வனப்பகுதியில் மின்வேலி அமைக்க வேண்டும் என்றனர்….

The post சித்தூர் அருகே பகலில் பரபரப்பு தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் புகுந்த யானைகள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: