அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு கிராமமாக அவர் செல்லும் போது, அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம் மற்றும் முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளாளர் சமூக பெயர் மாற்றம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் எம்எல்ஏவிற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் பெரிய ஊர்ச்சேரி பகுதியில் அதிமுக வேட்பாளரான மாணிக்கம் எம்எல்ஏ வாக்குசேகரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது வ.உ.சிதம்பரனார் சிலை அருகே தமிழ்நாடு வெள்ளாளர் கூட்டமைப்பு மாநில மகளிரணி தலைவி ஷகிலா கணேசன் தலைமையில் 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு வந்து மாணிக்கம் எம்எல்ஏவிற்கு எதிராக கருப்புக் கொடிகளுடன் கோஷங்களை எழுப்பினர். உடனடியாக காவல்துறையினர் தலையிட்டு அவர்களை தடுத்து வாகனத்தில் ஏற்றிச் சென்று அலங்காரநல்லூர் காவல்நிலையத்தில் கொண்டு சென்றனர். பின்பு மாலையில் அவர்களை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்.