கோயிலுக்கு சொந்தமான நிலம், மனைகளின் வாடகை நிலுவை தொகை 88 கோடி வசூல்: அறநிலையத்துறை அதிரடி

சென்னை: தமிழகம் முழுவதும் கோயிலுக்குச் சொந்தமான  நிலங்கள், மனைகளின் குத்தகை, வாடகை நிலுவை தொகை ₹88 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கை:இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக திருக்கோயில் திருப்பணி, திருத்தேர், அடிப்படை வசதிகள் மேம்பாடு, பணியாளர்கள் நலத்திட்ட உதவிகள், ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டம் அனுப்பர்பாளையம் பிள்ளையார் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான 9 கடைகளில் நிலுவைத்தொகை அதிகமாக உள்ள வாடகைதாரர்களிடம் நேரடியாக செயல் அலுவலர் மற்றும் கோவை வடக்கு சரக ஆய்வருடன் சென்று வாடகை நிலுவைத் தொகையில் ஒரு பகுதியாக ₹1,70,770 வசூலிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வேணுகோபாலசாமி கோயிலுக்கு சொந்தமான கடை வாடகைதாரர்களிடம் இருந்து நிலுவை தொகை ₹95,526 வசூல் செய்யப்பட்டது. கடலூர் வட்டம் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான புதுப்பாளையம் மாசிமக மண்டகப்படி கட்டிடம் வெளிப்புறம் கடை எண் ஏ,பி வாடகை நிலுவை ₹2,96,544 நிலுவை பலமுறை வாடகை கேட்டும் செலுத்தாததால் இரண்டு கடைகளையும் திருக்கோயில் சார்பாக பூட்டப்பட்டது.திருச்சி பெரிய கடை தெரு எல்லையம்மன் கோயிலுக்கு சொந்தமான 90 சதுரஅடியில் உள்ள கட்டிடத்திற்கு வாடகை நிலுவை தொகையை பல முறை கேட்டும் தராமல் காலதாமதம் செய்ததால் கடையைப்பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதிகாரிகள் நடவடிக்கையால் வாடகை நிலுவை தொகை ₹88 கோடி வசூலானது. இதுபோன்ற வாடகை மற்றும் குத்தகை நிலுவைத் தொகையினை செலுத்தி கோயிலுக்கு வருவாய் பெருக்குவதன் மூலம் திருக்கோயில் திருப்பணி மற்றும் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post கோயிலுக்கு சொந்தமான நிலம், மனைகளின் வாடகை நிலுவை தொகை 88 கோடி வசூல்: அறநிலையத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: