கொள்ளிடம் பகுதியில் தொடர் மழையால் அறுவடை பணி பாதிப்பு-விவசாயிகள் வேதனை

கொள்ளிடம் : கொள்ளிடம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறுவடை பணி பெரிதும் பாதிக்கப்பட்டது.மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் குளிர்ந்த காற்று தொடர்ந்து வீசிக்கொண்டிருந்தது. இரவு முழுவதும் சற்று வேகமாக குளிர்ந்த காற்று வீசிக் கொண்டே இருந்த நிலையில் நேற்று காலை முதல் மேகமூட்டம் அதிகம் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை 8 மணி அளவில் மழை பெய்ய துவங்கி தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் பரவலாக மிதமான முதல் அதிகமான வரை பெய்து கொண்டே இருந்தது. இதனால் தொடர்ந்து சில தினங்களாக நடைபெற்று வந்துகொண்டிருக்கும் அறுவடை பணி பெரிதும் பாதிக்கப்பட்டது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் மூட்டைகளை எடுத்துச் சென்றவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அறுவடை இயந்திரங்கள் வயலில் இறங்கி அப்படியே அறுவடை பணியை நிறுத்திவிட்டு வயலிலேயே நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அறுவடை பணியும் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில தினங்களாக அறுவடை செய்த வைக்கோல் அப்படியே வயலில் கிடப்பதால் தற்போது பெய்த மழையில் நனைந்து வைக்கோல் பயனற்றுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வைக்கோல் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் அறுவடைப் பணி பெரிதும் பாதிப்பதுடன் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தொடர்ந்து இயற்கை சீற்றத்தை சந்தித்து பெரும் நஷ்டத்தை மீண்டும் மீண்டும் சந்தித்து வரும் நிலையில் தற்போது பெய்யும் மழை விவசாயிகளுக்கு மேலும், மேலும் பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.உளுந்து மற்றும் பயறு விதைப்பு செய்த விவசாயிகள் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் உளுந்து மற்றும் பயறு செடிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மழை விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்று மயிலாடுதுறை மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் வெட்டாத்தங்கரை விஸ்வநாதன் தெரிவித்தார்….

The post கொள்ளிடம் பகுதியில் தொடர் மழையால் அறுவடை பணி பாதிப்பு-விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: