கொரோனா கால கற்றல் இழப்பை தடுக்க மாணவர்களின் வீட்டிற்கே சென்று கல்வி போதிக்கும் இயக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஆசிரியர் தினத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் நேற்று உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில், சிறப்பாகப் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நல்லாசிரியர் விருதை 1997ம் ஆண்டு முதல் “டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது” என  கலைஞரால்  அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நடப்பதும் கலைஞர் ஆட்சியின் தொடர்ச்சிதான். அதனால்  இந்த விழாவிலே மகிழ்ச்சியுடன் பங்கேற்றிருக்கிறேன். இந்த மகிழ்வான, மதிப்பு மிகுந்த நிகழ்விலே 2020-2021 ம் கல்வியாண்டிற்கு, 389 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு உள்ளது. திமுக அரசைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும்போதும்  ஆசிரியர்களின் நலனில் சிறப்புக் கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப்பின் பெற்றோர்களின் கவனம் அரசுப் பள்ளிகளில் பெரிதும் குவிந்து வருகிறது. இதை ஆசிரியர்களாகிய நீங்கள் இன்னும் வலுப்படுத்த வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுக்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் மூலமாக அடிக்கடி கூட்டங்கள் நடத்தியும், பள்ளி விழாக்களுக்குப் பெற்றோரை அழைத்து உரையாடியும் விழா நிகழ்வுகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்தும் அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டும். அரசுப் பள்ளிகளில் படிப்பைத் தாண்டி, விளையாட்டு, கலை இலக்கியப் போட்டிகள், மொழித்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சிகள் – குறிப்பாக ஆங்கிலத்தில் பேச்சுப் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டல் நிகழ்ச்சி நடத்தும்பொழுது அதில், மாணவரோடு பெற்றோரையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். இந்த நிதிநிலை அறிக்கையில், 2021-ம் ஆண்டு பள்ளிக்கல்வித் துறைக்கென தமிழ்நாடு அரசு ரூ. 32,599.54 கோடி ஒதுக்கியுள்ளது.  தனி ஒரு துறைக்கு ஒதுக்கப்படும் அதிகபட்ச தொகை இதுவாகும். முன்னாள் மாணவர் சங்கங்களோடு இணைந்தும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புத் திட்டத்தின்கீழும் நிதி திரட்டி பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் அதை நிர்வகிக்கும் குழுக்களில் பெற்றோர் பிரதிநிதிகள் சிலரைச் சேர்த்துக்கொள்ளவும் வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் உங்களைப் போன்ற நல்லாசிரியர்கள் பலர் “வீடுதேடிக் கல்வி வழங்குதல்”என்ற கொள்கையோடு மாணவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று கல்வி கற்பித்தீர்கள்.  இதுபோன்ற சிறப்பு முயற்சியை அனைத்து குக்கிராமங்களுக்கும் எடுத்துச்சென்று பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பைச் சரிசெய்ய அரசு ஒரு இயக்கத்தைத் தொடங்க இருக்கிறது.  உங்களைப் போன்ற ஆசிரியர் சமூகம் இவ்வியக்கத்தை முன்னின்று வழிநடத்தித் தரவேண்டும். அறிவார்ந்த சமூகம் என்பது வகுப்பறையில் இருந்தே வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கு வகுப்பறையைத் தாண்டிய வாசிப்பு இருக்க வேண்டும். பெரியார், அண்ணா,  கலைஞர் மூவரும் வாசித்தும் விவாதித்தும் வளர்ந்தவர்களே.  தமிழ்நாட்டு மாணவர்கள்,  இந்திய அளவில் மட்டுமின்றி,  உலக அரங்கிலும் புகழ்பெற்று நிற்கப் பாடுபட வேண்டும். டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்ட அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் மீண்டும் வாழ்த்து கூறுகிறேன் என்று பேசினார். இந்த கலந்துரையாடலில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார்,  மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post கொரோனா கால கற்றல் இழப்பை தடுக்க மாணவர்களின் வீட்டிற்கே சென்று கல்வி போதிக்கும் இயக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: