குழப்பத்திற்கு யார் காரணம் என மக்களுக்கு தெரியும் அதிமுக ஆட்சியில்தான் நீட் தமிழகத்தில் நுழைந்தது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: நீட் வருவதற்கு காரணமாக இருந்தவர்கள் யார், மிகப்பெரிய  குழப்பத்தை ஏற்படுத்தியது யார் என்ற  விவரங்கள் தமிழக மக்கள் அனைவருக்கும்  தெரியும்  என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  கூறினார்.   சென்னை தலைமை செயலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  எதிர்க்கட்சி  துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், நீட் தேர்விற்கு அரசு பள்ளிகளில் பயிற்சி  அளிக்கப்படுவதால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார். அதிமுக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு  நீட் தமிழகத்தில் நுழைந்தது. கடந்த 4 ஆண்டுகள் மாணவர்கள் நீட் தேர்வை  சந்திக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் நீட்தேர்விற்கான  பயிற்சி தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் நீட் தேர்வில் தமிழகம் விலக்கு பெறும் வகையில் திமுக அரசு  தொடர்ந்து பணிகளை நடந்து வருகிறது. டெல்லியில் பிரதமரை சந்தித்த  முதல்வர் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று  கூறியுள்ளார். நிச்சயம் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும். 2011 ஜனவரியில் உயர் நீதிமன்றத்திற்கு சென்று தடை ஆணை பெற்றது திமுக அரசு, ஆனால்  அதற்கு பிறகு 2017ல் ஆட்சியில் இருந்த அதிமுகவை பொறுத்தவரை மருத்துவம்  மற்றும் பல் மருத்துவம் ஆகிய படிப்புகளில் நீட் தேர்வில் இருந்து விலக்கு  அளிக்க வேண்டும் என்கிற இரு தீர்மாணங்கள் சட்டமன்றத்தில் கொண்டு  வரப்பட்டது. தீர்மானங்கள் குடியரசு தலைவருக்கு  அனுப்பப்பட்டு அந்த இரு மசோதாக்களும் அவரின் அனுமதிக்காக காத்திருந்தது.  அப்போது இந்த அரசின் சார்பில் எந்தவிதமான அழுத்தமும், வலியுறுத்தலும்  மத்திய அரசுக்கு கொடுக்கப்படாத நிலையில் குடியரசு தலைவர் அந்த  தீர்மானத்திற்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்தார்.அப்போதெல்லாம் எதிர்கட்சியின் துணை தலைவர் எதுவும்  பேசவில்லை. ஆனால் இப்போது குழப்பத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து இருக்கிறார். உண்மைகளை மறைத்து நீட் வருவதற்கு  காரணமாக இருந்தவர்கள் யார், நீட் தேர்வு எப்போது இருந்து நடைபெற்று கொண்டு  இருக்கிறது, மாணவ சமுதாயத்திற்கு மிகப்பெரிய மன உளைச்சலை தந்தது யார்,  மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது யார் இதுபோன்ற விவரங்கள் தமிழக  மக்களுக்கு அனைவருக்கும் தெரியும், தெரிந்திருந்தும் இதுபோன்ற ஒரு குழப்ப  அறிக்கையை ஏன் வெளியிட்டார் என்று தெரியவில்லை.  இப்போது வரை நீட்  என்பது இருக்கிறது.  அதற்கு மாணவர்கள் பயிற்சி எடுத்துக் கொள்வது அவர்கள்  கடமை, நீட் பயிற்சி இப்போது வந்தது இல்லை அதிமுக ஆட்சியில் கொண்டு  வரப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்….

The post குழப்பத்திற்கு யார் காரணம் என மக்களுக்கு தெரியும் அதிமுக ஆட்சியில்தான் நீட் தமிழகத்தில் நுழைந்தது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: