குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது செம்பட்டி கிராம ஊராட்சி.  இங்கு 7500க்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர்.  அருப்புக்கோட்டையிலிருந்து ஆத்திபட்டி விலக்கு வழியாக செம்பட்டிக்கு தனியார் பள்ளி வாகனங்கள் மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்வதற்கு அதிகம் வந்து செல்கின்றன.  மேலும் செம்பட்டி வழியாக தான் புலியூரானுக்கு செல்லவேண்டி உள்ளது.  புலியூரானில் உள்ள  தனியார் மில்களுக்கு வேலைக்கு செல்பவர்களும் இந்த ரோட்டை பயன்படுத்தி தான் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.  மில் வாகனங்களும், அரசு பேருந்து மற்றும் மினி பேருந்துகளும் அருப்புக்கோட்டையிலிருந்து செம்பட்டி வழியாக புலியூரான் வரை இயக்கப்படுகிறது.  ஆத்திபட்டியிலிருந்து செம்பட்டி வரை இரண்டு கி.மீட்டருக்கு சாலை கடந்த சில வருடமாக பராமரிக்கப்படாமல் உள்ளது.  இதனால் இந்த சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதுடன் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழுந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.   சாலையோரம் வடிகால், வாய்க்கால் இல்லாததால் கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் தேங்கி நிற்கிறது.  இந்த சாலையில் உள்ள பள்ளங்களில் புழுதிகள் அதிகளவில் காணப்படுகிறது.  இதனால்  மழை நேரங்களில் சகதிகளில் வாகனங்கள் சிக்கி வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.  நேற்று காலை பள்ளி வாகனம் சகதியில் சிக்கிக் கொண்டது.  கிராம பொதுமக்கள் டிராக்டர் மூலம் வாகனத்தை மீட்டனர்.  இந்த சாலையின் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என பலதரப்பட்ட மக்கள் சென்று வருகின்றனர்.  எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு சாலைப்பணிகளை விரைந்து தொடங்கிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: