குடியிருப்பு வாசிகள் அவதி: பொதுமக்கள் புகார்

 

ஈரோடு, ஜூன் 13: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட காளைமாட்டு சிலை அருகே திங்கள் கிழமை தோறும் வாரச்சந்தை கூடும். இந்த சந்தை முழுக்க முழுக்க குடியிருப்பு பகுதியில் நடக்கிறது. இங்கு விவசாயிகள் மட்டும் அல்லாது 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்க பெருமாள் வீதி, கிழக்கு பட்டாக்கார வீதி, ஷேக் தாவூத் வீதிகளில் காய்கறி, மளிகை பொருட்கள், திண்பண்ட கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு கடை அமைக்கும் வியாபாரிகள் பெரும்பாலனோர் வியாபாரத்தை முடித்து விட்டு போகும்போது, காய்கறி கழிவு மற்றும் குப்பைகளை முறையாக அகற்றாமல் குடியிருப்புக்கு முன்பும், கழிவு நீர் ஓடைகளிலும் வீசி சென்று விடுகின்றனர்.

இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: திங்கள் கிழமை தோறும் நடக்கும் இந்த சந்தையில் 150க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை அமைக்கின்றனர். இந்த சந்தை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. சந்தை முடிந்து வியாபாரிகள் செல்லும் போது காய்கறி கழிவுகளை அகற்றாமல் வீட்டிற்கு முன்பும், சாக்கடைகளில் வீசி செல்கின்றனர். இதனால், எங்களது வீடுகளில் பெருச்சாலி, எலி தொல்லைகள் அதிகரிக்கிறது.

மேலும், சந்தை கூடுவதால் எங்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியவில்லை. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, வியாபாரிகள் மற்றும் குடியிருப்பு வாசிகளின் நலன் கருதி இப்பகுதியில் நடக்கும் சந்தையை அருகில் உள்ள காலியிடத்தில் நடத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post குடியிருப்பு வாசிகள் அவதி: பொதுமக்கள் புகார் appeared first on Dinakaran.

Related Stories: