ரூ.20 லட்சம் போதை இலை செடி பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு கடந்த 2 நாட்களுக்கு முன், கென்யா நாட்டில் இருந்து ஒரு பார்சல், ஏர் கூரியர் மூலம், தபால் நிலையத்துக்கு வந்தது. இந்த பார்சலின் மேல் பகுதியில் மூலிகை மருந்து பொடி இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், கென்யா நாட்டில் அனுப்புபவரின் முகவரி மற்றும் தொலைபேசி எண், சென்னையில் யாருக்கு செல்கிறது என்ற முகவரி, தொலைபேசி எண் இருந்தது. அந்த பார்சலில் குறிப்பிட்ட சென்னை மற்றும் கென்யா தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால், அந்த எண் தற்போது உபயோகத்தில் இல்லை என தெரிந்தது. பின்னர், அந்த முகவரியில் விசாரித்தபோது, போலி என தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள், அந்த பார்சலை பிரித்து பார்த்தனர். அதில், காயவைத்து பதப்படுத்தப்பட்ட ஒரு வித இலைகள் இருந்தன. அவற்றை எடுத்து மாதிரி ரசாயன பரிசோதனைக்காக ஆய்வு கூடத்துக்கு அனுப்பினர். அந்த பரிசோதனையில் ஹாட்லீவ் எனப்படும் ஒருவகை போதை செடியின் இலை. அவை, ஆப்ரிக்க கண்டத்தில் மட்டுமே விளையக்கூடியது. அதனை பதப்படுத்தி அனுப்பியுள்ளனர். இதை அப்படியே சாப்பிடலாம், பொடியாக்கி உணவில் கலந்தும் சாப்பிடலாம். இதனால், ஒருவகை போதை ஏற்படும். இந்தியாவில் இந்த இலை தடை செய்யப்பட்டுள்ளது என தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள், அந்த போதை செடிகளை பறிமுதல் செய்தனர். மொத்தம் 8 கிலோ கொண்ட இலையின் மதிப்பு, ₹மதிப்பு 20 லட்சம் என கூறப்படுகிறது. இதையடுத்து, அதனை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுங்கத்துறை அதிகாரிகள், வழக்குப்பதிவு செய்து போதை செடியை கென்யாவில் இருந்து சென்னைக்கு வரவழைத்தது யார். இதுபோல் எத்தனை நாட்களாக கடத்தி வரப்படுகிறது என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: