கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்தால் கடும் நடவடிக்கை

கிருஷ்ணகிரி, ஜூன் 23: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சரயு எச்சரிக்கை விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம் நாடுவானப்பள்ளி கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு கலெக்டர் சரயு தலைமை வகித்தார். இதில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத் துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவது குறித்து, துறை அலுவலர்கள் பொதுமக்களுக்கு நேரடியாக எடுத்துரைத்தனர். பின்னர், கலெக்டர் சரயு பேசியதாவது: ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்காக செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறி, அவர்கள் எவ்வாறு பயனடைய முடியும் என்பதை அலுவலர்கள் மூலம் விளக்கம் அளிப்பதற்காக, மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது. அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி பயிலும் கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், மாதந்தோறும் ₹1000 வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், குழந்தை திருமணத்தை தடுக்கும் பொருட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பாக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குழந்தை திருமணம் செய்வோர் மீது, குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு உயர்கல்வி அளிப்பதனால், கல்வி இடைநிற்றலை தடுக்க முடியும். கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி, அனைத்து துறைகளில் சிறந்தவர்களாக உருவாக்க முடியும். அங்கன்வாடி மையங்களில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் உள்ளிட்ட சத்தான பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும், கர்ப்பிணிகள், குழந்தைகள் உரிய நேரத்தில் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ள வேண்டும். பள்ளி முடித்து வீட்டிற்கு வரும் குழந்தைகளின் திறன்களை வெளிப்படுத்தும் விதமான சூழ்நிலையை, பெற்றோர்கள் உருவாக்கி தர வேண்டும். குழந்தைகள் செல்லும் இடங்களை கண்காணிக்க வேண்டும். வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்தில், பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

நாடுவானப்பள்ளி ஊராட்சி பொதுமக்களிடமிருந்து, கடந்த வாரம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அதில் தகுதியான 388 மனுக்களுக்கு ₹93.12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் பேசினார். முன்னதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகள் சார்பாக அமைக்கப்பட்ட கண்காட்சியை கலெக்டர் சரயு பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி ஆர்டிஓ பாபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநுர் அருள்ராஜ், வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் கிருஷ்ணன், தாசில்தார் சம்பத், வேப்பனஹள்ளி ஒன்றிய குழு தலைவர் சரோஜினி, ஊராட்சி மன்றத் தலைவர் வளர்மதி குணசேகரன் மற்றும் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

The post கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்தால் கடும் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: