சுனந்தா புஷ்கர் மர்ம மரண வழக்கு : சசிதரூருக்கு நிபந்தனை முன்ஜாமின்

டெல்லி: சுனந்தா புஷ்கர் மர்ம மரண வழக்கில் சசிதரூருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அனுமதி இல்லாமல் வெளிநாடு செல்ல கூடாது என்ற நிபந்தனை சசிதரூருக்கு விதிக்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் பிணைத் தொகையுடன் சசிதரூருக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது. முன்னதாக கடந்த 2014-ஆம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர்  டெல்லி லீலா பேலஸ் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சுனந்தா மரணம் இயற்கையானதல்ல. விஷத்தால் நிகழ்ந்தது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய டெல்லி போலீஸ், சசிதரூர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இது குறித்து டெல்லி போலீஸ் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில் சசிதரூர் மீது மட்டுமே மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதால், அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட வேண்டும் என்று டெல்லி காவல் துறை தெரிவித்தது. சசிதரூர் மீது மனைவியை கொடுமைபடுத்துதல், தற்கொலைக்குத் தூண்டுதல் என இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் சசிதரூர் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அரசியல் தலைவர்களுக்கான நீதிமன்றத்துக்கு டெல்லி நீதிமன்றம் பரிந்துரை செய்தது. இதன் விசாரணை மே 28-ஆம் தேதி நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக ஜுலை 7 நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சசிதரூர்க்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்படுவதை தவிர்க்க, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி சசிதரூர் மனுத் தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் சசிதரூருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: