காட்டு தீ அணைக்கும் பணியில் ஈடுபட்ட வனத்துறை ஊழியர்களுக்கு மருத்துவ முகாம்

 

ஊட்டி, மார்ச் 25: குன்னூர் அருகே வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வனத்துறை ஊழியர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது. நீலகிரி வன கோட்டம், குன்னூர் வனச்சரகத்திற்குட்பட்ட பிளாக்பிரிட்ஜ் அருகேயுள்ள பாரஸ்ட் டேல் வனப்பகுதியில் கடந்த 12ம் தேதி காட்டு தீ ஏற்பட்டது. வனத்தின் அருகில் தேயிலை தோட்டத்தில் வைக்கப்பட்ட தீ எதிர்பாராத விதமாக வனத்தில் பரவியது. பலத்த காற்று வீசியதாலும், உறை பனி காரணமாக செடி கொடிகள் காய்ந்து இருந்ததாலும் தீ கொளுந்து விட்டு எரிந்தது.

150க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்த போதும் காட்டு தீயை கட்டுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் விமானப்படையின் உதவி நாடப்பட்டது. கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் ஹெலிகாப்டர் மூலம் ரேலியா அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீ பரவிய பகுதியில் தெளிக்கப்பட்டது. சுமார் 8 நாட்களுக்கும் மேலகா எரிந்த காட்டு தீ அணைக்கப்பட்டது. தீ அணைக்கப்பட்ட போதும், தரையில் மட்கி போய் கிடந்த குப்பைகள் எரிந்து புகைந்து கொண்டிருந்தன.

இவற்றை வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட வன ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி அணைத்தனர். கடும் புகையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வன ஊழியர்களுக்கான மருத்துவ முகாம் வனத்துறை சார்பில் குன்னூரில் நடந்தது. தனியார் மருத்துவமனை வளாகத்தில் நடந்த இம்முகாமில் காட்டு தீயால் ஏற்பட்ட புகையை சுவாசித்த 50க்கும் மேற்பட்ட வன ஊழியர்களுக்கு நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் ஏதேனும் உள்ளதா என்பதை மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கியதுடன் மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டது. இம்முகாமில் தீயணைப்புத்துறை பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை வழங்கப்பட்டது. இதில் குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post காட்டு தீ அணைக்கும் பணியில் ஈடுபட்ட வனத்துறை ஊழியர்களுக்கு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: