ஊட்டி, நவ. 11: ஊட்டி அருகே கேத்தி பாலாடா பகுதியில் கடை வீதியில் உலா வந்த காட்டு மாட்டை கண்டு அப்பகுதி மக்கள் கடும் அச்சமடைந்தனர். நீலகிரி மாவட்டம் வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. வனங்களில் புலி, சிறுத்தை, காட்டு மாடுகள், யானை உள்ளிட்ட பல்வேறு வகை வன விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவை உள்ளன. காட்டு மாடுகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நீலகிரி வன கோட்டத்தில் கோத்தகிரி, குன்னூர், குந்தா, பெங்கால்மட்டம், கேத்தி, செலவிப் நகர், ஊட்டி-கோத்தகிரி சாலை, குன்னூர்-கோத்தகிரி சாலை, தூதூர் மட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தேயிலை தோட்டங்கள் மற்றும் காட்டு மாடுகள் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன. சில சமயங்களில் மனித – காட்டு மாடு மோதல் சம்பவங்களும் நிகழ்கின்றன. ஊட்டி அருகே கேத்தி பாலாடா பகுதி உள்ளது. இப்பகுதியில் மலைகாய்கறிகள் அதிகளவு விளைவிக்கப்படுகின்றன.
அறுவடை செய்யப்படும் காய்கறிகள் கேத்தி பாலாடா வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை கழுவி தூய்மைப்படுத்த ஏராளமான கேரட் கழுவும் இயந்திரங்கள் உள்ளன. இச்சூழலில், வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு மாடு அப்பகுதியில் உலா வந்ததுடன், கேரட் அப்பகுதியில் கொட்டி கிடந்த வீணான கேரட்களையும் சாப்பிட்டு சிறிது நேரம் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் உலா வந்தது.
பின்னர் சாவகாசமாக வனத்திற்குள் சென்று மறைந்தது. இப்பகுதியில் காட்டு மாடு நடமாட்டத்தால் அச்சமடைந்த பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டு மாடுகளை வனத்துறையினர் கண்காணித்து விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கேத்தி பாலாடா கடைவீதியில் காட்டு மாடு உலா appeared first on Dinakaran.