குன்னூர், நவ.15: கனமழை எதிரொலியாக பர்லியார் ஊராட்சி தொடக்கப்பள்ளிக்குள் புகுந்த மண் குவியல்களை 11-வது நாளாக சீரமைப்பு பணி மேற்கொண்டு அகற்றப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. இரவு மற்றும் பகல் நேரங்களில் பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 3 ம் தேதி பெய்த கனமழையால் குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பர்லியார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மழைநீர் மற்றும் மண் புகுந்து, பள்ளி முழுவதும் சேதமடைந்தது. குறிப்பாக கழிவுநீர் செல்லும் கால்வாயில் பாறைகள் அடைத்துள்ளதால், கழிவுநீரும், மழைநீரும் பள்ளி வளாகத்தில் சூழ்ந்தது. அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அசம்பாவித, தவிர்க்கப்பட்டது. இதனிடையே பள்ளி வகுப்பறையிலும், பள்ளி வளாகத்தை சுற்றிலும் பெரும் சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து வருவாய்த்துறையினரும், ஊராட்சி நிர்வாகமும் இணைந்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஒருவரது வீட்டிற்குள் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பலத்த சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று பொக்லைன் இயந்திரம் மூலமாக 11-வது நாளாக சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால் ஒரு வாரத்திற்குள் பள்ளி கட்டிடத்தில் வகுப்புகள் மீண்டும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கனமழை எதிரொலியாக அரசு பள்ளிக்குள் புகுந்த மண் குவியல் அகற்றம் appeared first on Dinakaran.