கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் கூடுதலாக 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி நீதிமன்றத்தில் மனு

கள்ளக்குறிச்சி, ஜூலை 11: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் கூடுதலாக 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான வழக்கு வரும் 15ம் தேதி விசாரணைக்கு வருகிறது. கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 229 பேர். அதில் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி நேற்று வரை 66 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பிரபல சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், முக்கிய குற்றவாளியான புதுவை மடுகரை மாதேஷ் உள்பட 22 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பிரபல சாராய வியாபாரி கண்ணுக்குட்டி உள்பட 11 பேரை சிபிசிஐடி போலீசார் 3 நாள் காவல் விசாரணைக்கு எடுத்தனர். அதில் கோவிந்தராஜிடம் விசாரணை மேற்கொண்டதில் தன்னுடன் சேர்ந்து விஷ சாராயம் விற்பனையில் ஈடுபட்டவர்கள் விவரங்களை தெரிவித்துள்ளார். அதாவது கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் பரமசிவம்(43). இவர் சாராய வியாபாரி கண்ணுக்குட்டியின் மைத்துனர். மற்றொருவர் கருணாபுரத்தை சேர்ந்த பரமசிவம் மகன் முருகேசன் (36). இவர் காய்கறி விற்பனையில் ஈடுபட்டு வந்தவர். பின்னர் கண்ணுக்குட்டிக்கு சாராய விற்பனையில் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து பரமசிவம் மற்றும் முருகேசன் ஆகிய இருவரையும் கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கண்ணுக்குட்டி சிபிசிஐடி போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தின் படி பரமசிவம் மற்றும் முருகேசனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள நேற்று சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு வரும் 15ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதனையடுத்து அன்று சாராய வியாபாரிகள் பரமசிவம் மற்றும் முருகேசன் ஆகிய இருவரையும் சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

The post கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் கூடுதலாக 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி நீதிமன்றத்தில் மனு appeared first on Dinakaran.

Related Stories: