பந்தலூர், ஜூன் 6: பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கான கர்ப்பகால பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ட்ரன் மற்றும் ஏகம் பவுண்டேஷன் ஆகியன சார்பில் கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கான கர்ப்பகால பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராஜாராமன் தலைமை தாங்கினார். சுகாதார நிலைய மருத்துவர் ராதிகா பேசும்போது, கர்ப்ப காலத்தில் முறையான ஆரோக்கியமான நிலையில் இருக்க வேண்டும். அதனால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் முறையான பரிசோதனைகளை உரிய இடை வெளியில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், சுகாதார நிலையத்தில் வழங்கக்கூடிய மருந்து மாத்திரைகளை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அரசு மூலம் வழங்கபடும் ஊட்டச்சத்தை சரியான முறையில் எடுத்து கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்தான உணவுகளை தினசரி நான்கு வேளையாக பிரித்து எடுத்துக் கொள்வதன் மூலம் தேவையான ஊட்டச் சத்து கிடைக்கும்.
மேலும், ஆரோக்கியமான உணவுகளான பழங்கள், கீரைகள் மற்றும் சிறு தானிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது அவசியம். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் உரிய ஆலோசனைகளை கடைப்பிடிப்பதன் மூலம் சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்றார். ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் பேசும்போது, கர்ப்ப காலத்தில் மன நலம் ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம். இந்த சூழலில், நல்ல கதை அம்சம் உள்ள புத்தகங்கள் பாடல்கள் கேட்பதை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். மனதில் ஏற்படும் சோகங்கள் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், செவிலியர்கள் ஆஷா பணியாளர்கள் கர்ப்பிணிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.