கருங்கலில் மது பாராக மாறிய வேன் ஸ்டாண்ட் குடிமகன்களை விரட்டி பிடித்து கைது செய்த அதிரடிப் படையினர்

கருங்கல், ஜூலை 2 : கருங்கலில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் பஸ்சில் செல்ல வசதியாக நுழைவுவாயில் மற்றும் வெளியில் செல்லும் பகுதியில் பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி மார்த்தாண்டம் செல்லும் சாலையில் ஒரு பஸ் நிறுத்தமும், புதுக்கடை சாலையில் மற்றொரு பஸ் நிறுத்தமும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கட்டுமான பணிகள் நடப்பதால் பஸ் நிலையம் வழியாக பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அப்பகுதியில் உள்ள வேன் ஸ்டாண்ட் வழியாக 2 பஸ் நிறுத்தங்களுக்கும் சென்று வருகின்றனர். இதற்கிடையே வேன் ஸ்டாண்ட் அருகே டாஸ்மாக் கடை உள்ளது.

இங்கு வரும் மதுப்பிரியர்கள் மதுவை வாங்கி வந்து வேன் ஸ்டாண்டில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பகுதியில் அமர்ந்து மது குடித்தனர். இதனால் அப்பகுதி மாலையில் பார் போல் செயல்பட்டது.இது குறித்து மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. எஸ்பி உத்தரவின் பேரில் அதிரடிப்படை போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் குடிமகன்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் போலீசார் 4 பேரை விரட்டி பிடித்தனர்.பின்னர் அவர்களை கருங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கருங்கலில் மது பாராக மாறிய வேன் ஸ்டாண்ட் குடிமகன்களை விரட்டி பிடித்து கைது செய்த அதிரடிப் படையினர் appeared first on Dinakaran.

Related Stories: