கனியாமூர் தனியார் பள்ளி கலவரத்தின்போது போலீஸ் மீது கல்வீசி தாக்கிய 94 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்

கள்ளக்குறிச்சி, ஏப். 29: கனியாமூர் தனியார் பள்ளி கலவரத்தின்போது போலீஸ் மீது கல்வீசி தாக்கிய 94 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் விசாரணை ஜூன் 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டனது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து அப்பள்ளி வளாகத்தில் இவருடைய மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது.

இந்த கலவரத்தின்போது பள்ளி சூறையாடப்பட்டதோடு, பள்ளி வாகனங்கள் மற்றும் போலீஸ் வாகனங்களும் தீவைத்து எரிக்கப்பட்டன. இந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பள்ளி வளாகத்தில் பொருட்களை சூறையாடி திருடியது, காவல்துறை வாகனத்துக்கு தீவைத்தது, பசு மாடுகளை துன்புறுத்தியது, காவல்துறை உயர் அதிகாரிகள் உள்பட போலீஸ் மீது கல்வீச்சு தாக்கியது என மொத்தம் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 4 வழக்குகளில் 53 சிறார்கள் உள்பட மொத்தம் 916 பேர் மீது 41 ஆயிரத்து 250 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தாக்கல் செய்தனர்.

இதில் சின்னசேலம் துணை மின் நிலையம் அருகே சேலம் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது கல்வீசி தாக்கிய வழக்கில் 119 பேர் மீது சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதன்படி கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2ல் நீதிபதி ரீனா முன்னிலையில் 94 பேர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதில் 25 பேர் பல்வேறு காரணங்களால் ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ரீனா உத்தரவிட்டார்.

The post கனியாமூர் தனியார் பள்ளி கலவரத்தின்போது போலீஸ் மீது கல்வீசி தாக்கிய 94 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: