கண்ணுக்கு முன்னால் தெரியும் ஆபத்து: சென்னையை காக்க காலநிலை மாற்ற அவசர திட்டத்தை செயல்படுத்த வேண்டும்! ராமதாஸ் அறிக்கை

காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் கடல்மட்ட உயர்வு காரணமாக, சென்னையின் 100 மீட்டர் கடலோரப் பகுதிகள் அடுத்த 5 ஆண்டுகளில் கடலில் மூழ்கி விடும் ஆபத்து இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. சென்னைக்கான ஆபத்து கண்களுக்கு தெரியத் தொடங்கி விட்ட நிலையில்,  இந்த விவகாரத்தில் அரசும், சென்னை மாநகராட்சியும் இனியும் அலட்சியம் காட்டக்கூடாது.காலநிலை மாற்றத்தின் தீயவிளைவுகளை கட்டுப்படுத்துவதற்கான பன்னாட்டு அமைப்பான சி 40  நகரங்கள் (சி40 சிவீtவீமீs), நகர்ப்புற மேலாண்மை மையம் ஆகியவற்றுடன் சென்னை மாநகராட்சி இணைந்து தயாரித்த ஆய்வறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2100-ஆம் ஆண்டுக்குள் சென்னை மாநகரின் மொத்தப் பரப்பளவில் 16%, அதாவது 67 சதுர கிலோ மீட்டர் கடலில் மூழ்கிவிடும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் 215 குடிசைப் பகுதிகள், 7500 குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படக்கூடும்.சென்னையில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அடுத்த 5 ஆண்டுகளில் கடல் மட்டம் 7 செ.மீ உயரக்கூடும். அவ்வாறு உயர்ந்தால் கடற்கரையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகள் கடலில் மூழ்கக் கூடும். காலநிலை மாற்றத்தால் சென்னைக்கு ஏற்படக்  கூடிய ஆபத்துகள் குறித்து ஏற்கனவே பல அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அவற்றில் இடம்பெற்றுள்ள விவரங்களை சென்னை மாநகராட்சி ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதும், அதைத் தடுக்கத் தேவையான திட்டங்களை பட்டியலிட்டிருக்கிறது என்பதும் தான் இப்போது புதிதாக தெரியவந்துள்ள செய்திகள் ஆகும்.காலநிலை மாற்றத்தால் சென்னைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி திட்டமிடத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டால் மட்டும் தான் இந்த தீய விளைவுகளை கட்டுப்படுத்த முடியும். இல்லாவிட்டால் குதிரைகள் ஓடிய பிறகு லாயத்தை பூட்டிய கதையாகி விடும்.அதே நேரத்தில் சென்னைக்கான இந்த ஆபத்து தடுக்கவே முடியாதது அல்ல. காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதன் மூலம் இந்த பாதிப்பை தடுக்க முடியும். எடுத்துக்காட்டாக, அதிக போக்குவரத்து, நகர்ப்புற செயல்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக சென்னை விமானநிலையப் பகுதியின் சராசரி வெப்பநிலை 43.3 டிகிரி செல்சியசாக கடந்த ஆண்டில் பதிவாகி உள்ளது. அதேநேரத்தில் இந்த நிகழ்வுகள் இல்லாத, அடர்த்தியான பசுமைப்போர்வை கொண்ட கிண்டி தேசிய பூங்கா பகுதியில் 23 டிகிரியாக உள்ளது. சுற்றுச்சூழலை மேம்படுத்தினால் காலநிலை மாற்றத்தை சமாளிக்க முடியும் என்பதையே இது காட்டுகிறது.காலநிலை மாற்றத்தின் தீயவிளைவுகளை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி தயாரித்துள்ள செயல்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். சென்னை மாநகராட்சியின் செயல்திட்டத்தில் இடம் பெற்றுள்ள திட்டங்கள் போதுமானவை அல்ல என்பதால் கூடுதல் திட்டங்களை சேர்க்க வேண்டும். இதற்கு கூடுதலான நிதி தேவை. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு சென்னையில் காலநிலை மாற்ற அவசர நிலையை சென்னை மாநகராட்சி அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.ஏற்கனவே  நான் பலமுறை வலியுறுத்தியவாறு தமிழ்நாடு சட்டப்பேரவையும், அனைத்து நகர்ப்புற, கிராமப்புற உள்ளாட்சி  அமைப்புகளும், பொது அமைப்புகளும், பெரு நிறுவனங்களும் காலநிலை மாற்ற அவசர நிலையை உடனடியாக பிறப்பிக்க வேண்டும்; புவிவெப்பமடைதலை தடுக்கவும், சமாளிக்கவுமான திட்டங்களை உள்ளடக்கிய காலநிலை செயல் திட்டத்தை ஒவ்வொரு மட்டத்திலும் உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். காலநிலை மாற்ற தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதை அனைவரும் பங்களிக்கும் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும் அரசை கேட்டுக் கொள்கிறேன்….

The post கண்ணுக்கு முன்னால் தெரியும் ஆபத்து: சென்னையை காக்க காலநிலை மாற்ற அவசர திட்டத்தை செயல்படுத்த வேண்டும்! ராமதாஸ் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: