துரைப்பாக்கம்: கண்ணகி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேருக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி சென்னை முதன்மை சிறப்பு நீதிபதி திருமகள் உத்தரவிட்டார். துரைப்பாக்கம் அடுத்த கண்ணகி நகர் பகுதியில் போதைபொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கண்ணகி நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் கண்ணகி நகர் இன்ஸ்பெக்டர்கள் முருகன், சிவக்குமார், எஸ்.ஐ வசந்தராஜா ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார், பல்லவன் குடியிருப்பு, வ.உ.சி தெரு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரை பார்த்ததும் 2 பேர் தப்பி ஓட முயற்சித்தனர். அவர்களை துரத்தி பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், கண்ணகி நகரை சேர்ந்த தமிழரசன் (25), மணி (எ) மாரிமுத்து (25) ஆகிய 2 பேரும் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2 கிலோ 400 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பிறகு 2 பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு சென்னை முதன்மை சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருமகள் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில், குற்றம் உறுதி செய்யப்பட்டதால் 2 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். பிறகு 2 பேரும் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்….
The post கண்ணகி நகர் பகுதியில் கஞ்சா விற்ற இருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை: சென்னை முதன்மை சிறப்பு நீதிபதி உத்தரவு appeared first on Dinakaran.