கூடலூர், ஏப்.5: தேனிமாவட்டம் கூடலூருக்கு தெற்கே உள்ள வண்ணாத்திப்பாறையில் பழமையான கண்ணகி கோயில் உள்ளது. தமிழக கேரள எல்லைப்பகுதியான, மங்கலதேவி மலையில் புலிகள் சரணாலயப் பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,830 அடி உயரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. சேரன் செங்குட்டுவன் கட்டியதாக கருதப்படும் இக்கோயில் சிதிலமடைந்ததால், பின்னாளில் சோழப்பேரரசன் முதலாம் ராஜராஜன் ஆட்சிகாலத்தில் சோழர் கலைப்பாணியில் புனரமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு மிக்க இந்தக் கண்ணகி கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை சித்திரை முழுநிலவு விழா, மங்கலதேவி கண்ணகி விழா, பூமாரிவிழா என முப்பெரும் விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு சித்திரை முழு நிலவு விழா வரும் ஏப்.23 அன்று நடைபெற உள்ளது.
இதையொட்டி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா நடத்துவது குறித்து கம்பம் மற்றும் கூடலூர் கண்ணகி அறக்கட்டளையினரின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு அறக்கட்டளை செயலாளர் ராஜகணேசன் தலைமை தாங்கினார். பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரும் ஏப்.23 அன்று நடைபெறும் சித்திரை முழு நிலவு விழாவை கண்ணகி கோவிலில் சிறப்பாக கொண்டாடுவது, ஆண்டு தோறும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது, வெளி மாவட்டத்தில் இருந்து வரும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுப்பது, கண்ணகி கோயிலுக்கு தமிழக வனப்பாதையான தெள்ளுக்குடி வழியாக செல்வதற்கு பாதையை சீரமைக்க வனத்துறையினரிடம் கோருவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர்கள் கருத்த கண்ணன், காசிராஜன் சரவணன், சபரி ராஜன், பஞ்சு ராஜா, சுதாகரன், ஈஸ்வரன் மற்றும் மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.
The post கண்ணகி கோயில் சித்திரை முழுநிலவு விழா அறக்கட்டளையினர் ஆலோசனை appeared first on Dinakaran.