கடையநல்லூர் அருகே நயினாரகரத்தில் டிரோன் மூலம் நெற்பயிருக்கு பூச்சிமருந்து தெளிப்பு செயல் விளக்கம்

கடையநல்லூர்: தென்காசி மாவட்டத்திலேயே முதன்முறையாக கடையநல்லூரை அடுத்த நயினாரகரத்தில் வேளாண்மைத்துறை சார்பில் நெற்பயிருக்கு டிரோன் ஸ்பிரேயர் மூலம் பூச்சிமருந்து தெளிப்பு செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.  கடையநல்லூர் பகுதிகளில் கடந்த மாதம் பெய்த மழையால் அனைத்து குளங்களும் நிரம்பின. இதனால் அதிகமான விவசாயிகள் தற்போது நெல் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சுமார் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிக அளவு மழை பொழிந்ததால் நெற்பயிர்களில் பூச்சி கொல்லி தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. விவசாய பணிகளுக்கு போதிய வேலையாட்கள் கிடைக்காததால் மாற்று தொழில்நுட்பத்தை நோக்கி விவசாயிகள் செல்ல தொடங்கி உள்ளனர். அதன்படி இடைகால் அருகே உள்ள நயினாரகரம் கிராமத்தில் சாகுபடி செய்துள்ள நெல் பயிர்களுக்கு டிரோன் மூலம் பூச்சிமருந்து தெளிப்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.இது குறித்து வேளாண்மைத் துறை இணை இயக்குனர் நல்ல முத்து ராஜா கூறுகையில், ‘டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிப்பதால் மிகக்குறைந்த அளவு அதாவது 3ல் 1 பங்கு பூச்சிமருந்து பயன்பாட்டு அளவு குறைகிறது. இதனால் செலவு குறைவு மற்றும் குறைந்த நேரத்தில் விரைவாக தெளிக்கலாம். அதாவது 1 ஏக்கருக்கு 10 நிமிடத்தில் சீராக அனைத்து இடங்களிலும் தெளிக்கலாம்.மேலும் சாதாரண முறையில் விசைத்தெளிப்பான் கொண்டு மருந்து தெளிப்பவரின் உடல்நலனும் பாதுகாக்கப்படுகிறது என்றார். நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் சேதுராமலிங்கம், கடையநல்லூர் மற்றும் நயினாரகரம் பகுதி விவசாயிகள், தங்கப்பழம் கல்லூரி மாணவிகள் உட்பட பலர்  கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் கருப்பசாமி, ராமநாராயணன் செய்திருந்தனர்….

The post கடையநல்லூர் அருகே நயினாரகரத்தில் டிரோன் மூலம் நெற்பயிருக்கு பூச்சிமருந்து தெளிப்பு செயல் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: