கடலூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி; வாழைத்தார் விலை கிடுகிடு உயர்வு: ரூ.500 முதல் 800 வரை விற்பனையானது

கடலூர்: கடலூர் மாவட்டம் வாழை சாகுபடியில் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது. கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான ராமாபுரம், எம் புதூர், எஸ் புதூர், குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, வழிசோதனைபாளையம், ஒதியடிகுப்பம், பத்திரக்கோட்டை, புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார்4 ஆயிரம் எக்டர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள் சுவையாக இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் கேரளா, குமரிமாவட்டங்களில் விளைவிக்கக்கூடிய ஏலக்கி வாழை ரகமும் கடலூர் பகுதியில் விளைவிக்கப்பட்டு இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் விளையும் ஏலக்கி வழைப்பழங்கள் சுவையாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.  இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா நோய் பரவல் தொற்று காரணமாக விவசாய விளைபொருட்கள் விற்பனை மந்தமானது. குறிப்பாக வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்தது. அதன்பின்னர் சகஜநிலை திரும்பியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் காற்று உள்ளிட்டவையால் வாழைகள் முறிந்து விழுந்ததால் தார்கள் விலை வீழ்ச்சியை கண்டன. விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளானார்கள். இதற்கிடையே சாகுபடி குறைந்த காரணத்தால் வரத்தும் குறைந்துவிட்டது. இதனால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடலூர் வாழை மார்க்கெட்டில் ஏலக்கி வகை வாழைப்பழம் கிலோ ரூபாய் 65 க்கும், செவ்வாழை ரூ. 52 க்கும் விற்கப்படுகிறது. பெரிய வாழைத்தார் ஒன்று பழங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 500 முதல் 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வாழைத்தார் பூவன் ரூபாய் 450 முதல் 500 க்கும், கற்பூரவள்ளி ரூபாய் 350 முதல் 400 க்கும் விற்பனையாகிறது. பஜ்ஜி செய்ய பயன்படுத்தப்படும் மொந்தன் வாழைதார் ரூபாய் 400 முதல் 450 க்கு விற்பனையாகிறது. இது தவிர வாழை இலையின் விலையும் அதிகரித்துள்ளது. சாதாரண நாட்களில் ஒரு இலை ரூபாய் 4 முதல் 5 வரையும், முகூர்த்த நேரங்களில் இது 12 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.  கடந்த சில ஆண்டுகளாக வாழை விற்பனை அடியோடு முடங்கிய நிலையில் தற்போதைய நிலையில் விவசாயிகளுக்கு பலன் கொடுத்து வருகிறது. இதுகுறித்து வாழை விவசாயி நத்தப்பட்டு ஜெய்சங்கர் கூறுகையில், கடலூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக நோய் பரவல் தொற்று காரணமாக அடியோடு விற்பனை முடங்கியது. தற்போது இந்த விலை உயர்வு ஓரளவுக்கு விவசாயிகளை ஆறுதல் படுத்தியுள்ளது. சாகுபடி குறைந்துள்ளதால் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. வரும் காலங்களில் விலை குறையலாம் .ஆனால் விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு அரசு இதன் விலையை தற்போது உள்ளவாறு தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும். விற்பனை மற்றும் சாகுபடியை அதிகரிக்க ஏற்றுமதி திட்டங்களை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்றார்….

The post கடலூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி; வாழைத்தார் விலை கிடுகிடு உயர்வு: ரூ.500 முதல் 800 வரை விற்பனையானது appeared first on Dinakaran.

Related Stories: