ஒன்றிய அரசு வழங்காமல் இழுத்தடித்து வருவதால் தமிழகத்தில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு: பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்து ஏமாற்றம்

சென்னை: கொரோனா தொற்றை தடுக்க ஒரே வழி தடுப்பூசிதான் என்ற நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய தடுப்பூசியை தராமல் காலம்தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்றைய நிலையில் தடுப்பூசி தமிழகத்தில் இல்லை என்ற நிலை உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு  தடுப்பூசி மருந்து போடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசியை ஆரம்ப கட்டத்தில் பொதுமக்கள் போட தயக்கம் காட்டினர். இதனால், அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும் தடுப்பூசி முகாம்களில் குறைந்த அளவிலேயே தடுப்பூசி போட மட்டுமே ஆர்வம் காட்டினர். இந்த நிலையில்தான் இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து கொரோனாவில் 2வது அலை வேகமாக பரவியது. அதன்படி இந்தியா முழுவதும் தினசரி பாதிப்பு 4.25 லட்சத்தையும் தாண்டியது. இந்த நிலையில்தான், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே கொரோனா தொற்று வராமல் தடுப்பது அல்லது கொரோனா வந்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் தடுப்பூசி போட ஆர்வமுடன் மருத்துவமனைக்கு வந்தனர். அதேநேரம்,  தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.  இதனால் போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வரும் நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஒன்றிய அரசிடமிருந்து கடந்த 28ம் தேதி நிலவரப்படி இதுவரை ஒரு கோடியே 44 லட்சத்து 39 ஆயிரத்து 940 தடுப்பூசிகள் மட்டுமே வந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இந்த நிலையில், நேற்று முன்தினம் கூடுதலாக 2 லட்சம் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது. தமிழகத்தில் தினசரி சுமார் 3.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் நிலையில் வெறும் 2 லட்சம் தடுப்பூசி ஒருநாள் கூட பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் நேற்றும், இன்னும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்வதாக 18 வயது முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக காலையிலேயே வந்தனர். ஆனால், தடுப்பூசி இல்லாததால் இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஒன்றிய அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவீதம் தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது. அங்கு பணம் கொடுத்தால் மட்டுமே தடுப்பூசி போட முடியும்.  இதனால் மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. அதனால் ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு 90 சதவீதம் தடுப்பூசியை வழங்க வேண்டும், தனியார் மருத்துவமனைகளில் தேங்கியுள்ள தடுப்பூசிகளையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இதற்கும் ஒன்றிய அரசு பதில் அளிக்கவில்லை. இதனால், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை முழுவதுமாக போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று காலை முதல் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நெல்லை என மாநிலம் முழுவதுமே தடுப்பூசிக்காக மக்கள் காத்திருந்து, திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. சென்னையில் வேலைக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு வந்த மக்களும், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஒன்றிய அரசு உடனடியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், பல மாநிலங்களில் மக்கள் தடுப்பூசி போடாமல் உள்ளனர். விருப்பமும் இல்லாமல் உள்ளனர். ஆனால் அந்த மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்வதால் அங்கு கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தடுப்பூசியும் வீணாக்கப்படுகிறது. இதுபோன்று தமிழகத்தில் இல்லாததால், உடனடியாக ஒன்றிய அரசு, தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்….

The post ஒன்றிய அரசு வழங்காமல் இழுத்தடித்து வருவதால் தமிழகத்தில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு: பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்து ஏமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: