ஒன்றிய அரசால் நடைமுறைக்கு வந்த பணமதிப்பிழப்பு வழக்கு ஜன. 2ல் தீர்ப்பு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: பணமதிப்பிழப்புக்கு எதிராக  தொடரப்பட்ட வழக்கில் வரும் ஜனவரி 2ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 2016 நவம்பரில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் கள்ளநோட்டு புழக்கம் கட்டுப்படுத்தப்படும் என்றும், தீவிரவாதிகளிடம் உள்ள பணம் அழிக்கப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்தனர். அதன்பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பெரும் இன்னல்களை மக்கள் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. ஒன்றிய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக 57 ரிட் மனுக்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் விசாரணை நடத்திய நிலையில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்த்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘ஒன்றிய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்’ என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மறு பரிசீலனை செய்யக்கூடாது. உச்ச நீதிமன்றம் இதில் தலையிட வேண்டாம்’ என்று தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்துல்நசீர், பி.ஆர்.கவாய், போபண்ணா, ராமசுப்ரமணியம், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வரும் ஜனவரி 2ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவித்தது. அதனால், ஒன்றிய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்கிறதா? இல்லையா? என்பது அன்றைய தினம் தெரிந்துவிடும்….

The post ஒன்றிய அரசால் நடைமுறைக்கு வந்த பணமதிப்பிழப்பு வழக்கு ஜன. 2ல் தீர்ப்பு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: