குழந்தைகளை இடமாற்றம் செய்ய ஐகோர்ட் உத்தரவு தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகை

புழல்: குழந்தைகளை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர். புழல் கன்னடப்பாளையம், ஜீவா தெருவில்  சரவணா வித்யாலயா நர்சரி பள்ளி ஆஸ்பெட்டாஸ் கூரையில் ஆபத்தான நிலையில் இயங்கி வருவாதால், பள்ளி மீது நடவடிக்கை எடுக்குமாறு தொடக்க கல்வித்துறை இயக்குநருக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சின்ன கொடுங்கையூரை சேர்ந்த சசிக்குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். பள்ளியின் நிலை குறித்த ஆவணங்களை படித்து பார்த்த நீதிபதி, ‘‘எந்த அடிப்படை வசதியும் இல்லாத இந்த பள்ளியில் குழந்தைகள் படிப்பதை ஏற்க முடியாது. இந்த ஆண்டு இப்பள்ளி தொடர்ந்து செயல்பட அனுமதிக்க முடியாது. எனவே இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளை அருகிலுள்ள வேறு பள்ளிகளுக்கு மாற்ற கல்வித்துறை இயக்குநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேற்று புழல் வட்டார கல்வி அலுவலர் ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று நீதிமன்ற உத்தரவு நகலை அங்குள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டினார். இதை அறிந்ததும் ஏராளமான பெற்றோர்கள் நேற்று மதியம் 12 மணிக்கு பள்ளியை முற்றுகையிட்டனர். தகவலறிந்து, பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் இளம்பரிதி, அம்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) விஜயலட்சுமி, புழல் வட்டார கல்வி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், மாலை 4 மணிக்கு புழல் காந்தி தெருவில் இருக்கும் ஒன்றிய நடுநிலை பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பெற்றோருடன் கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்தில் சரவணா வித்யாலயா பள்ளியில் படிக்கும் 250 மாணவ, மாணவிகளையும் இந்த பள்ளியில் படித்ததற்காக, ஏதாவது ஒரு ஆவணத்துடன் புழல் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியில் சேர்ந்து கொள்ளலாம். தற்போதுள்ள சீருடையை பயன்படுத்திக்கொள்ளலாம். இன்று முதல் அந்தந்த பெற்றோர் விருப்பம் உள்ள பள்ளியில் சேர்ந்து கொள்ளலாம். இதற்கான உத்தரவை நாங்கள் வழங்குகிறோம் என கல்வி அதிகாரிகள் கூறினர். இதைத்தொடர்ந்து பெற்றோர் அனைவரும் கலைந்து சென்றனர். 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: