எடப்பாடி காழ்ப்புணர்ச்சியால் பேசுவது தமிழக மாண்புக்கு தவறானது காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் தாக்கு கலைஞர் நாணய வெளியீட்டு விழா குறித்து

வேலூர் ஆக.21: கலைஞர் நாணய வெளியீட்டு விழா குறித்து எடப்பாடி பழனிசாமி காழ்ப்புணர்ச்சியால் பேசுவது தமிழக மாண்புக்கு தவறானது என்று காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் கூறினார். காட்பாடியில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின்கீழ் வீடு கட்ட பயனாளிகளுக்கு ஆணையை அமைச்சர் துரைமுருகன் நேற்று வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அத்திக்கடவு- அவிநாசி திட்டம் தொடர்பான எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு நான் பதில் சொல்லவில்லை. முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூறாண்டு நிறைவு விழாவையொட்டி நாணயம் வெளியிட்டது தொடர்பாக தொடர்ந்து இதே போல தான் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்து வருகிறார். இது தவறான செயல். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் அண்ணா ஆகியோருக்கும் நாணயங்கள் வெளியிடப்பட்டது. நாணயங்கள் வெளியிடுவது மறைந்த தலைவர்களுக்கு ஒரு மரியாதை செலுத்தக்கூடிய சம்பவம். இதனை மாற்று கட்சியினர் கூட பாராட்டி வருகின்றனர். தமிழகத்தில் ஒரு மாண்பு இருக்கிறது. மறைந்த தலைவர்களை பற்றி பேசமாட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமி காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இது போன்ற கருத்துக்களை கூறி வருகிறார். அவர் அப்படி பேசுவது தவறானது.

கீழ் பவானி கால்வாய்களை சீர்படுத்துவதற்கு தமிழக அரசு ₹900 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் அங்குள்ள விவசாயிகள் அதனை சரி செய்யக்கூடாது என தகராறு செய்து வருகிறார்கள். அவர்களின் பிரச்னையை சிறிது சிறிதாக சரி செய்து அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாணயம் வெளியீட்டு விழாவிற்கு ஏன் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று, அரசிடம் தான் கேட்க வேண்டும். காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்தில் ஒன்றிய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் தான் ஈடுபட்டு வருகிறது. தென்பெண்ணை பாலாறு இணைப்பு என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்த திட்டத்தை நிறைவேற்ற தான் தொடர்ந்து முயற்சி செய்வேன். இவ்வாறு அவர் கூறினார். மேலும் ‘சமஸ்கிருதம் ஒரு சக்தி வாய்ந்த மொழி, அறிவியல் பூர்வமான மொழி’ என ஆளுநர் தெரிவித்துள்ள கருத்து குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, ‘அது டெட் லாங்குவேஜ், செத்துப் போன மொழி. இது கூட ஆளுநருக்கு தெரியவில்லை’ என்றார்.

The post எடப்பாடி காழ்ப்புணர்ச்சியால் பேசுவது தமிழக மாண்புக்கு தவறானது காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் தாக்கு கலைஞர் நாணய வெளியீட்டு விழா குறித்து appeared first on Dinakaran.

Related Stories: