வாலிபரை தாக்கிய எஸ்ஐ.,க்களை சஸ்பெண்ட் செய்யக்கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 16 பேர் சிறையிலடைப்பு

சென்னை: தலைகவசம் அணியாமல் வந்த வாலிபரை தாக்கிய இரண்டு போக்குவரத்து எஸ்ஐக்களை சஸ்பெண்ட் செய்ய கோரி, மாம்பலம் காவல்நிலையத்தை முற்றுகையிட முயன்ற 16 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் கடந்த 6ம் தேதி சாலிகிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்ற வாலிபர் தனது தாய் சங்கீதா மற்றும் தங்கையுடன் ஒரு பைக்கில் வந்தார். அப்போது, துரைசாமி சுரங்கப்பாதை அருகே போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் மாம்பலம் போக்குவரத்து எஸ்ஐ சுரேஷ் மற்றும் சிறப்பு எஸ்ஐ ஜெயராமன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். ஒரே பைக்கில் மூன்று பேர் வந்ததை பார்த்த எஸ்ஐ சுரேஷ், அந்த பைக்கை வழிமறித்து தலைகவசம் அணியாமல் மூன்று பேர் ஒரே பைக்கில் வரலாமா என்று கேட்டார்.

அப்போது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் எஸ்ஐ சுரேஷ் மற்றும் சிறப்பு எஸ்ஐ ஜெயராமன் ஆகியோர் வாலிபரை விளக்கு கம்பத்தில் வைத்து தாக்கியுள்ளனர். மேலும் அந்த வாலிபர் மீது 3 பிரிவுகளின் கீழ் மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், வாலிபர் மீது தாக்குதல் நடத்திய போக்குவரத்து எஸ்ஐ சுரேஷ் மற்றும் சிறப்பு எஸ்ஐ ஜெயராமன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய கோரி தமிழ்நாடு இளைஞர் இயக்கம் சார்பில் மாம்பலம் காவல் நிலையத்தை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். இதனால் மாம்பலம் காவல்நிலையம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பின்னர் அறிவித்தபடி தமிழ்நாடு இளைஞர் இயக்க ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமையில் 16 பேர் நேற்று மாலை மாம்பலம் காவல் நிலையத்தை முற்றுகையிட வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தி.நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள கிருஷ்ணவேனி திரையரங்கம் எதிரே வழிமறித்து மடக்கினர். அப்போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இதை தொடர்ந்து தமிழ்நாடு இளைஞர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் உட்பட 16 பேரையும் போலீசார் கைது ெசய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அனைவர் மீதும் தடையை மீறி போராட்டம் நடத்தியது, அரசு அதிகாரியை பணி ெசய்ய விடாமல் தடுத்தது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: