‘‘கோவை ‘‘இலை கட்சியின் மாஜி விஐபி மீது ஏன், தொண்டர்களும் நிர்வாகிகளும் கடுப்பாக இருக்காங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘அதியமான்கோட்டை மாவட்டத்தில் மாஜி விஐபி மீது, இலைக்கட்சியின் ஒரு தரப்பினர் கடும் கோபத்தில் இருக்காங்களாம். ஆவின் மோசடியில் தலைமறைவான மாஜி தொடர்பாக அதியமான் மாவட்டத்தில் விருதுநகர் தனிப்படை விசாரணை நடத்தினாங்க. அப்போது உள்ளூர் மாஜியின் உதவியாளரையும், டிரைவரையும் விசாரணைக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. இதனால் பொங்கிய மாஜி விஐபி, கட்சிக்காரங்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது பழைய கதை. இதுதான் இப்போ மாஜிக்கு எதிரா திரும்பியிருக்காம். மாஜியோட பேரைக்கொண்ட இலைகட்சி முக்கிய பிரமுகர் ஒருத்தரை 2 மாசத்துக்கு முன்னாடி ஆள்கடத்தல் வழக்கில் போலீஸ் அரெஸ்ட் பண்ணாங்க. அப்போது அவரது ஆதரவாளர்கள் பொங்குனாங்க. ஆனால் மாவட்ட செயலாளராக இருக்கும் மாஜி, எந்த ரியாக்ஷனும் கொடுக்கலையாம். இப்ப மட்டும் தன்னோட பினாமியான உதவியாளருக்காக எப்படி ஆர்ப்பாட்டம் நடத்தினாருன்னு கேட்டு எதிர் தரப்பு குமுறிக்கிட்டு இருக்காம். அவரு பதவிக்காக நாடகம் போடுறவரு என்று தொண்டர்கள் கடுப்பாகி மாஜி விஐபிக்கு எதிராக திரும்பி இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கோயம்பேடு கட்சிக்காரங்க சென்னை தலைமைக்கு புது நிபந்தனை ஏதாவது போட்டு இருக்காங்களா என்ன…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மனுநீதி சோழன் மாவட்டத்தில் கோயம்பேடு கட்சிக்காரங்க போட்டியிட மாட்டோம்னு தைரியமாக சொல்றாங்களாம். இதனால, என்ன செய்வதென்று தெரியாமல் கட்சியின் கோயம்பேடு தலைமை யோசிக்குதாம். கோயம்பேடு கட்சியின் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் மாவட்டத்தில் நடந்ததாம். அதுல, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடந்ததாம். அப்போது ஒட்டு மொத்த நிர்வாகிகளும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் நமக்கு வெற்றி கிடைப்பது கஷ்டம். ெதாண்டர் பலமும், கரன்சி பலமும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே இருக்கு. வசதி உள்ளவர்கள் மட்டும் தங்கள் இஷ்டப்படி தேர்தலில் நிற்கலாம். போட்டியே கிடையாதுனு சொன்னாலும் ஒன்றிரண்டு கைகள் தான் உயர்ந்துச்சாம். மற்றபடி கூட்டத்தில் நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்னு ஒரு குரல் கூட எழும்பாமல் மயான அமைதியாக இருந்ததாம். அதில் பேசிய சிலர், தேர்தலில் போட்டியிட்டாலும் செலவழிக்க விட்டமின் ‘‘ப’’ இல்லைனு கைவிரிச்சுட்டாங்களாம். இதனால் தலைமையிடம் விட்டமின் ‘‘ப’’ கொடுத்தால் எலக்ஷன்ல நிற்கிறோம். இல்லை என்றால் எங்களை விட்டுவிடுங்க என்று நிபந்தனை விதிக்கலாமா என்று யோசனை செய்துகிட்டு இருக்காங்க. இந்த விவகாரம் தலைமைக்கு தெரிந்தும் எந்த ஒரு ரியாக்ஷனும் இதுவரை காட்டாமல் மவுனமாக இருந்து வருகிறதாம். இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கோயம்பேடு கட்சிக்காரங்க தேர்தல் சமயத்துல வெளியூர் டூர் போக முடிவு செய்து இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘விசாரணை குழு தூங்கி வழிந்தால் என்ன நடக்கும்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவை மாநகராட்சியில், பல்வேறு குற்றச்சாட்டின் அடிப்படையில் உதவி ஆணையர்கள், உதவி நகரமைப்பு அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், பில் கலெக்டர்கள் என பல்வேறு ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில், குறிப்பாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கிழக்கு மண்டலத்தில் பணிபுரிந்த வரி வசூலர் இளவரசர் என்ற பெயரை கொண்டவர் ₹25 லட்சம் கையாடல் செய்ததால், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. முறைகேடு செய்த பணத்தையும் அவரிடமிருந்து திரும்ப பெறவில்லை. இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால், அந்த குழுவும் மந்தமான நிலையில் உள்ளது. மோசடி நடந்த காலக்கட்டத்தில் உதவி வருவாய் அலுவலராக பணிபுரிந்த நபர் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நான்கு வருடங்கள் கடந்துவிட்ட பின்னரும் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் விசாரணை குழு தூங்கி வழிகிறதாம். விசாரணை குழு தூங்கி வழிகிறது என்றால் முறைகேட்டை மூடி மறைக்கும் செயல் என்று அங்கே பணிபுரியும் ஊழியர்களே பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘பாலையும் தண்ணியையும் பிரிக்க முடியாதது போல ஆவின் ஊழலையும் மாஜி அமைச்சரையும் பிரித்து பார்க்க முடியாது போல…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கன்னியாகுமரி மாவட்ட ஆவினில், பால்கோவா, பால்பேடா உள்ளிட்ட பால் தயாரிப்பு பொருட்கள் தொடர்ந்து ரகசியமாக கடத்தப்பட்டு வருகிறதாம். கடந்த வாரம் சுமார் 10 கிலோ பால்கோவா யாருக்கும் தெரிவிக்காமல் கடத்தி போயிருக்காங்களாம். தர பரிசோதனைக்கு பின், பால்கோவா, நெய், பால்பேடா உள்ளிட்டவற்றை பொருட்கள் பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டுவார்கள். அந்த சாவி, செக்யூரிட்டி அறையில் தான் இருக்கும். பின்னர் சம்பந்தப்பட்ட அலுவலர் வந்து கையெழுத்து போட்டு சாவியை எடுத்து செல்வார். ஆனால் விதிமுறை மீறி அதிகாரி அந்தஸ்தில் உள்ளவர், இரவில் சாவியை எடுத்து சென்று, அந்த அறையை திறந்து 10 கிலோ பால்கோவாவை லபக் செய்து விட்டு சென்றுள்ளார். இந்த விவகாரம் ஆவினில் புயலை கிளப்பி உள்ளது. அவருக்கு மேல் உள்ள அதிகாரி ‘கப்சிப்’ என்று அமைதி காக்கிறாராம். இலை ஆட்சியில் இட மாற்றம் செய்யப்பட்டு பணம் கொடுத்து மீண்டும் நாகர்கோவில் ஆவினுக்கே வந்தவர்கள் செய்யும் சேட்டைகள் தான் செம கடுப்பாக உள்ளதாக தற்போது உள்ள ஊழியர்கள் மத்தியில் பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது…’’ என்றார் விக்கியானந்தா….
The post உள்ளாட்சி தேர்தலின்போது கோயம்பேடு கட்சிக்காரர்கள் ‘டூர்’ போக ரகசியமாக திட்டமிடுவதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.