29 பேர் பலியான குரங்கணி தீ விபத்து விவகாரத்தில் விசாரணை அதிகாரி அறிக்கையை நடைமுறை படுத்த வேண்டும் : அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

புதுடெல்லி : தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிகொண்டனர். இதில் படுகாயம் அடைந்தவர்களில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து குரங்கணி தீ விபத்து குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு தரப்பில் ஒரு சிறப்பு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அதுகுறித்த துரித விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் குரங்கணி காட்டுத்தீ விபத்து குறித்து ராஜீவ் தத்தா என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து மனுவை பரிசீலனை செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம் விபத்து குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அரசும் கடந்த ஏப்ரல் 23ம் தேதி பதில் மனுவை தாக்கல் செய்தது.

இதில் கடந்த மே 18ம் தேதி வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் விசாரணை ஆணையம், குரங்கணி தீவிபத்து குறித்து தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையத்தின் ஆய்வறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது தேதிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணையர்கள் ஜாவீத் ரகீம், எஸ்பி.வாங்கிடி மற்றும் நாகின் நந்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான ராகேஷ் சர்மா ஒரு கோரிக்கை வைத்தார். அதில், குரங்கணி காட்டு தீ விபத்து குறித்து தீவிர ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழக்கின் விசாரணை அதிகாரி அதுல்யா மிஸ்ரா கடந்த இரு தினங்களுக்கு முன்பு வழங்கியுள்ளார்.

அதுகுறித்த பரிசீலனை தற்போது நடந்து வருவதால் அந்த அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து ஆணையர்கள் உத்தரவில்,”குரங்கணி தீவிபத்து குறித்து ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் விசாரணை அதிகாரி ஒப்படைத்துள்ளாதால் அதன்படி நடைமுறைகளை செயல்படுத்த மாநில அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயத்தின் ஆணையர்கள் நேற்று உத்தரவிட்டனர். இருப்பினும் வழக்கின் கோப்புக்காக விசாரணை அதிகாரி அதுல்யா மிஸ்ராவின் ஆய்வறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவில் நேற்று வலியுறுத்திய ஆணையர்கள் குரங்கணி தீவிபத்து குறித்து தீர்ப்பாயத்தில் இருந்த வழக்கை நேற்று முடித்து வைத்தனர். 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: