சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கான சட்டப் பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நாளை (நவ. 12) நடக்கிறது. மொத்தமுள்ள 68 தொகுதிகளிலும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 412 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 412 வேட்பாளர்களில் 94 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன; இதில் 50 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் பட்டியலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 11 வேட்பாளர்களில் ஏழு பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்; காங்கிரசில் 68 வேட்பாளர்களில், 36 பேர் மீதும், பாஜகவில் 68 வேட்பாளர்களில் 12 பேர் மீதும், பகுஜன் சமாஜ் கட்சியின் 53 வேட்பாளர்களில் இருவர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன. வேட்பாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 5 வேட்பாளர்கள் மீது வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வரும் டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும். முன்னதாக ஆளும் பாஜக சார்பில் பிரதமர் மோடி, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தனர். காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச் செயலாளர் பிரியங்கா உள்ளிட்ட மூத்த தலைவர்களும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டனர். கடந்த சில வாரங்களாக நடந்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. அங்கு நாளை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடத்துவதற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன….
The post இமாச்சல் பிரதேசத்தில் நாளை வாக்குப்பதிவு: 412 வேட்பாளர்களில் 94 பேர் மீது கிரிமினல் வழக்கு appeared first on Dinakaran.