அன்று கல்வான்… இன்று தவாங்… சீனாவின் எல்லை ஆதிக்கத்துக்கும் , சீண்டல்களுக்கும் நமது ராணுவ வீரர்கள் அவ்வப்போது பதிலடி கொடுத்து வந்தாலும், வர்த்தக ரீதியாக சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து ஓங்கியுள்ளது. இந்தியாவின் 2வது பெரிய வர்த்தக பங்குதாரராக சீனா திகழ்கிறது. கடந்த 2021-22 நிதியாண்டில், இந்தியா – சீனா இடையேயான இருதரப்பு வர்த்தகம் 11,583 கோடி டாலர் (அப்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ. 8,68,725 கோடி. இது இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில், அதாவது, 1,03,500 கோடி டாலரில் (ரூ.77,62,500 கோடி) 11.19 சதவீதம். இதே காலக்கட்டத்தில் அமெரிக்காவுடனான வர்த்தகம் 11,948 கோடி டாலர் (ரூ.8,96,100 கோடி).இந்தியாவுடனான வர்த்தகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு (2001 முதல் 2012 வரை) சீனா 10வது இடத்தில் இருந்தது. இதற்கு முன்னதாக 2000-01ல் 12வது இடம், 1999-2000ல் 16வது இடம், 1998-99ல் 18வது இடத்தில் இருந்தது. கடந்த 2020-21ல் மீண்டும் இந்தியாவின் முக்கிய வர்த்தக பங்குதாரராக சீனா மாறி விட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே, இந்தியாவுடனான வர்த்தகத்தில் போட்டி போட்டு அடுத்தடுத்த இடங்களில் இருப்பவை சீனாவும், அமெரிக்காவும்தான். இருப்பினும், இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. உதாரணமாக, கடந்த 2020-21ல், அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் இந்தியாவின் வர்த்தக உபரி 3,285 கோடி டாலர் (ரூ.2,46,375 கோடி). அதே நேரத்தில், சீனாவுடனான வர்த்தகத்தில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 7,331 கோடி டாலர் (ரூ.5,49,825 கோடி). இது வேறு எந்த நாட்டுடனான வர்த்தகத்திலும் இல்லாத பற்றாக்குறை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப்போனால், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த பற்றாக்குறை இரட்டிப்பாகி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.இதுபோல், அமெரிக்கா, சீனா தவிர இந்தியாவின் ‘டாப் 10’ வர்த்தக நாடுகளில் அடுத்த இடங்களில் ஐக்கிய அரபு எமிரேட், சவூதி அரேபியா, ஈராக், சிங்கப்பூர், ஹாங்காங், இந்தோனேஷியா, தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன. இவை எல்லாவற்றையும் விட, சீனாவுடனான இந்திய வர்த்தகத்தில் வர்த்தக பற்றாக்குறை கிடுகிடுவென உயர்ந்து வருவது, மிகவும் கவனிக்கப்பட வேண்டிய, கவலைக்குரிய விஷயமாகும். அதாவது, 21 ஆண்டுகளில் வர்த்தக பற்றாக்குறையானது 100 கோடி டாலரில் (அப்போதைய மதிப்பில் ரூ.4,800 கோடி) இருந்து 7,331 கோடி டாலராக ( ரூ.5,49,825 கோடி) அதிகரித்திருக்கிறது.காரணம், சீனாவில் இருந்து இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. கடந்த 2001-02 நிதியாண்டில் சீனாவில் இருந்து இறக்குமதி 2 கோடி டாலராக (ரூ.9,600 கோடி) இருந்தது. கடந்த 2020-21ல் 9,457 கோடி டாலராக (ரூ.7,09,275 கோடி) உயர்ந்திருக்கிறது. ஆனால், சீனாவுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி மேற்கண்ட காலக்கட்டத்தில் 100 கோடி டாலரில் (ரூ.4,800 கோடி) இருந்து 2,100 கோடி டாலராக (ரூ.1,57,500 கோடி) மட்டுமே அதிகரித்துள்ளது. இதனால்தான் வர்த்தக பற்றாக்குறை தற்போது ரூ.5,49,825 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை பிற நாடுகளுடனான மொத்த வர்த்தகப் பற்றாக்குறையில் மூன்றில் ஒரு பங்காக இருக்கிறது. இது, நடப்பு ஆண்டில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 5,100 கோடி டாலராக (ரூ.4,18,200 கோடி) உள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் 3,700 கோடி டாலராக (ரூ.3,03,400 கோடி) இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் பற்றாக்குறை 39 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே சீனாவுடனான இந்திய வர்த்தகத்தில் ஏற்றுமதி இறக்குமதி இடையேயான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருவது, கவலைக்குறியதாக மாறி வருகிறது. அதிலும், 2020ம் ஆண்டில் நடந்த கல்வான் தாக்குதலுக்கு பிறகு இந்த பற்றாக்குறை மிக அதிகமாகி விட்டது. காரணம், அந்த அளவுக்கு, சீனாவில் இருந்து இந்தியாவுக்கு பொருட்கள் இறக்குமதி ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்துள்ளது. 2020ல் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில்தான், அந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் மிக குறைந்த அளவாக 332 கோடி டாலருக்கு (ரூ.27,224 கோடி) இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் அடுத்த மாதமே இறக்குமதி 558 கோடி (45,759 கோடி) டாலராகி விட்டது. கடந்த ஜூலையில் இது 1,024 கோடி (ரூ.83,968 கோடி) டாலராக உயர்ந்து விட்டது.சீனாவில் இருந்து மாதாந்திர சராசரி இறக்குமதி மதிப்பு கடந்த 2020-21 நிதியாண்டில் 543 கோடி டாலராக (ரூ.40,725 கோடி) இருந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இது 788 கோடி டாலராகவும் (ரூ.59,100 கோடி), நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 861 கோடி டாலராகவும் (ரூ.70,602 கோடி) அதிகரித்துள்ளது. கல்வான் தாக்குதலுக்குப் பிறகு, சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கல்வான் தாக்குதல் நடந்து ஒரு சில வாரங்களிலேயே, அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 13 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சீன இறக்குமதி பொருட்களை குறைக்க வேண்டும் என அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. முதலில் 405 பொருட்கள் இந்த புறக்கணிப்பு பட்டியலில் இடம் பெற்றிருந்தன. 3000 பொருட்கள் வரை இந்த பட்டியல் நீண்டது. இந்தியாவில் கிடைக்கும் என்றால் அந்தப் பொருளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது என்பதை ஒரு சபதமாகவே ஏற்றனர். லடாக் தாக்குதலுக்கு பிறகும் இதே குரல் ஓங்கி ஒலித்தது. தற்போது ஆனால், இன்னமும் சீனாவை சார்ந்திருக்க வேண்டிய நிலையில்தான் இந்தியா இருக்கிறது. சமீபத்தில் அருணாசல பிரதேசம் தவாங் பகுதியில் சீனா அத்துமீறி தாக்கியுள்ளது. ஒவ்வொரு முறையும் எல்லைப்பகுதியில் சீனா வாலாட்டும்போதெல்லாம் இந்திய வீரர்கள் ஒட்ட நறுக்கி விரட்டி விடுகின்றனர். இதுபோல், இந்தியாவும் வர்த்தகத்தில் சீனாவை நம்பியிருக்காமல் மாற்று வழி தேட வேண்டும். சமாதானமாக இருப்பதுபோல் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதாக பாசாங்கு காட்டுவதும், சற்று நிலைமை சீரானதும் தாக்குதல் நடத்துவதும் சீனாவின் வழக்கமாகிவிட்டது. மற்றொரு தாக்குதலுக்கு சீனா தயாராவதற்கு முன்பு, சீனாவுக்கு வர்த்தக ரீதியாக இந்தியா அடி கொடுக்கவேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது….
The post இந்தியா – சீனா வர்த்தகம் ஆண்டு வாரியாக appeared first on Dinakaran.